இலங்கையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

இலங்கையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

1 mins read

இலங்கையில் கடந்த சில நாள்களாக நீண்ட வரிசைகளில் பல மணிநேரம் காத்திருந்து மக்கள் மண்ணெண்ணெய் வாங்கி வருகின்றனர்.

அங்கு மண்ணெண்ணெய்க்கான தேவையும் அதன் தட்டுப்பாடும் அங்கு ஒருசேர அதிகரித்துள்ளன.

இலங்கையில் உள்ள ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சபுகஸ்கந்தா நிலையம், கடந்த நவம்பர் 15- முதல் டிசம்பர் 7 வரை மூடப்பட்டது.

இதனால் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்தது.

தேவையான எரிபொருளையும் எண்ணெயையும் இறக்குமதி செய்ய, இலங்கையிடம் போதிய அந்நியச் செலாவணி இல்லை.

இதனால், உணவு, அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

-

பணவீக்கம் உச்ச அளவைத் தொட்டுள்ளது.

அத்துடன் கடந்த சில மாதங்களாகவே அங்கு எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

அவற்றில் பலர் உயிர் இழந்தனர்.

கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை இலங்கையில் 730 வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதனால் திரவ எரிவாயு நிறுவனங்கள் சிலிண்டர்களை மீட்டுக்கொண்டு பழுதானவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்று இலங்கையின் மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்தது.

அரசாங்கம் இந்தப் பிரச்சினையை விசாரித்து வருகிறது.

திரவ எரிவாயுவில் கலக்கும் புரோப்பேன் எரிபொருளின் அளவு அதிகரித்துள்ளதே அந்த வெடிப்புகளுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குறைகூறியுள்ளனர்.

திரவ எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் மண்ணெண்ணெயை நாடினர்.

இப்போது அதற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.