பிரபல பின்னணிப் பாடகரான கேகே கொல்கத்தாவில் இடம்பெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென மயங்கி விழுந்து காலமானார். இசை நிகழ்ச்சி முடிவடைந்ததும், உடல் நலமில்லை என அவர் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மாரடைப்பால் மாண்டாததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கேகேக்கு வயது 53. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 60க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். அப்படி போடு (கில்லி), உயிரின் உயிரே (காக்க காக்க), காதல் வளர்த்தேன் (மன்மதன்), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்), ஸ்டாபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை அவர் பதிவு செய்துள்ளார். தமிழில் அவர் பாடி மக்களைக் கவர்ந்த முதல் பாடல் கல்லூரி சாலை (காதல் தேசம்) பாடலாகும்.
தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா ஆகியோரின் இசையில் இவர் பாடியுள்ளார்.
2000ஆம் ஆண்டு தொடங்கி பத்து ஆண்டுகளில் இவர் பாடிய பல தமிழ் திரைப்பட பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தன. ரசிகர்களின் மனத்தையும் வெகுவாகக் கவர்ந்தன.
திரையுலகத்திற்கு அறிமுகமாவதற்கு முன் இவர் கிட்டத்தட்ட 3,500 விளம்பரங்களுக்குப் பாடியுள்ளார்.
கேகேவின் திடீர் மரணம் திரையுலகத்தினர், ரசிகர்கள் ஆகியோரைச் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இவருடைய குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

