எட்டு கிலோ மீட்டர் ஆழ்கடலில் படம்பிடித்து சாதனை

எட்டு கிலோ மீட்டர் ஆழ்கடலில் படம்பிடித்து சாதனை

1 mins read

ஜப்பானுக்குத் தெற்கே இஸு-ஒகாசவாரா கடலுக்கடியில் 8,336 மீட்டர் ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைப் படம்பிடித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத ஆழமான தேடலில் ஈடுபட்ட வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், ஜப்பான் ஆகியவற்றின் அறிவியல் அறிஞர்கள் நீண்ட வாலுடைய மீன்களைப் படம்பிடித்து உள்ளனர்.

இந்த மீன்கள் 'சூடோலிபாரிஸ்' இனத்தைச் சேர்ந்த அறியப்படாத நத்தை மீன் என்று நம்பப்படுகிறது.

முழுமையாக அதன் இனத்தை அடையாளம் காண்பதற்கான மாதிரி கிடைக்கவில்லை என்று பிபிசி தெரிவித்தது.

சில நாள்களுக்குப் பிறகு ஆய்வுக் குழுவினர், இதே கடலுக்கடியில் 8,022 மீட்டர் ஆழத்தில் மற்றோர் இனத்தைச் சேர்ந்த இரண்டு மீன்களை சேகரித்தனர். இந்த இரண்டு மாதிரிகள் நத்தை மீன் சூடோலிபாரிஸ் பெல்யாவி என்ற வகையைச் சேர்ந்தவை.

இந்த ஆய்வு மூலம், 8,000 மீட்டருக்கும் அதிக ஆழத்தில் சேகரிக்கப்பட்ட முதல் மீன் என்ற சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

"ஜப்பானிய அகழிகள் ஆய்வுக்கான நம்பமுடியாத இடங்களாக இருக்கின்றன. அத்தகைய ஆழத்தில் உள்ள உயிரினங்களின் உயிரோட்டமான வாழ்க்கையை அவை காட்டுகின்றன," என்று அறிவியல் குழுவின் முதன்மை ஆய்வாளரான ஆலன் ஜேமீசன் தெரிவித்தார்.

மின்டெரு-யுடபிள்யூஏ ஆழ்கடல் ஆய்வு நிலையத்தின் நிறுவனருமான பேராசிரியர் ஜேமீசன், தோக்கியோ கடற்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இந்த ஆழ்கடல் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.

Watch on YouTube