ஏழு வயதில் யோகாசனப் பயிற்றுநர்: இந்தியச் சிறுமி கின்னஸ் சாதனை

ஏழு வயதில் யோகாசனப் பயிற்றுநர்: இந்தியச் சிறுமி கின்னஸ் சாதனை

1 mins read

ஆக இளம் யோகாசனப் பயிற்றுநர் எனும் சாதனையைப் படைத்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் பிரான்வி குப்தா எனும் ஏழு வயது சிறுமி.

இந்தியாவில் பிறந்த பிரான்வி தற்போது துபாயில் வசித்து வருகிறார்.

யோகாசன சமூகத்தைப் பிரதிநிதிக்கும் 'யோகா அலையன்ஸ்' என்னும் ஆகப் பெரிய லாப நோக்கமற்ற அமைப்பு இச்சிறுமிக்கு யோகாசன ஆசிரியர் சான்றிதழை வழங்கியுள்ளது. 200 மணி நேரப் பயிற்சியை முடித்த பின்னர் இச்சிறுமியின் சாதனையை கின்னஸ் உலக அமைப்பு அங்கீகரித்துள்ளது.

இதற்குமுன் கடந்த 2021 ஜூலை மாதம், தமக்கு 9 ஆண்டு 220 நாள்களானபோது ரேயன்ஷ் சுரானி என்னும் சிறுவன், ஆக இளம் யோகாசனப் பயிற்றுநர் என்ற சாதனையைப் படைத்திருந்தான். இந்நிலையில், ஏழு ஆண்டு 165 நாள்களிலேயே அச்சாதனையை எட்டிவிட்டார் பிரான்வி.

இவர் மூன்றரை வயது முதலே யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வீட்டில் தம் தாயார் அந்தப் பயிற்சி செய்வதைப் பார்த்து, இவருக்கும் அதன்மீது ஆர்வம் பிறந்தது. தொடக்கத்தில் சில மாதங்கள் தாயார் செய்யும் பயிற்சிகளைப் பார்த்து அதைப்போலவே செய்து வந்தார்.

தமது ஏழாவது வயதில் யோகாசனப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த பிரான்வி, பள்ளி இடைவேளை நேரங்களில் அந்த வகுப்புகளுக்குத் தவறாமல் சென்று வந்தார்.

"நான் நேசிக்கும் யோகாசனத்தை ஏராளமானோரிடம் பரப்ப விரும்புகிறேன்," என்று கூறும் பிரான்வி, 'லேர்னிங் வித் பிரான்வி' என்னும் யூடியூப் ஒளிவழி மூலமாக யோகாசனப் பயிற்சி அளித்து வருகிறார்.

Watch on YouTube