கருங்கடலில் உள்ள பிரபலமான தீவை மீண்டும் கைப்பற்றிய உக்ரேன்

கருங்கடலில் உள்ள பிரபலமான தீவை மீண்டும் கைப்பற்றிய உக்ரேன்

2 mins read

ரஷ்ய படைகள் உக்ரேனின் முக்கியமான பாம்பு தீவிலிருந்து வெளியேறியுள்ளன.

ரஷ்யாவும் உக்ரேனிய அதிபர் அலுவலகமும் வியாழக்கிழமை அன்று இதைத் தெரிவித்தன.

ரஷ்ய துருப்புகள் வெளியேறியதை உறுதிப்படுத்திய தற்காப்பு அமைச்சு, அதை நல்லெண்ணச் செயல் என்று வருணித்தது. ரஷ்ய படைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்துவிட்டுதாகவும் கூறியது.

மேலும், உக்ரேனிலிருந்து வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய ஒரு மனிதாபிமானப் பாதையை அமைக்கும் உலக நிறுவனத்தின் முயற்சியை ரஷ்யா தடுக்கவில்லை என்று காட்டவே தன் துருப்புகள் வெளியேறியதாக அமைச்சு கூறியது.

ஆனால் ஏவுகணைகளையும் பீரங்கிகளையும் பயன்படுத்திய தன் நடவடிக்கைக்குப் பின்னர் ரஷ்ய துருப்புகள் இரண்டு படகுகளிலிருந்து அங்கு வெளியேறினர் என்று முன்னதாக உக்ரேனிய ராணுவம் கூறியது.

கருங்கடலில் உள்ள பாம்புத் தீவை உக்ரேன்மீதான போரின் முதல் நாளில் ரஷ்ய துருப்புகள் கைப்பற்றின.

சரண் அடையும்படி ரஷ்யப் போர்க்கப்பல் கூறியதை அங்கிருந்த உக்ரேனியப் படைகள் மறுத்த விதத்துக்காக பாம்பு தீவு மிகவும் பிரபலமானது.

உக்ரேன் கடற்கரைக்கு 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது பாம்புத் தீவு.

ரஷ்யா அங்கு நெடுந்தூரம் பாயக்கூடிய ஏவுகணைகளை அங்கு வைத்திருந்தால், அது கறுங்கடலின் பல பகுதிகளையும் தென் உக்ரேனையும் அதன் கட்டுக்குள் கொண்டுவர அது உதவியிருக்கும்.

-

இவ்வேளையில் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உக்ரேன் சென்று அதிபர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்துள்ளார்.

அமைதியை உண்டாக்க திரு ஸெலன்ஸ்கியிடமிருந்து ரஷ்ய அதிபர் புட்டினுக்கு செய்தியைத் தெரிவிக்கவும் அவர் முன்வந்தார்.

ரஷ்யா செல்லும் அதிபர் விடோடோ, இன்று இரவு திரு புட்டினைச் சந்திக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.