கறுப்பின ஆடவர் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் ஐவர் அடித்து உதைப்பதைக் காட்டும் காணொளிகளை அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகர காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) வெளியிட்டது.
சாலைச் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து 29 வயது திரு டயர் நிக்கஸ்சை அதிகாரிகள் இழுத்துச் செல்வதை ஒரு காணொளி காட்டியது.
"நான் ஒன்றுமே செய்யவில்லை, நான் வீட்டிற்குத்தான் செல்கிறேன்," என்று திரு நிக்கல்ஸ் கூச்சலிட்டார்.
அவரைத் தரையில் கிடத்திய அதிகாரிகள், மிளகுப் பொடியை முகத்தில் தூவினர்.
அவர்களுடன் போராடி நழுவி ஓட்டம்பிடித்த திரு நிக்கல்சை அதிகாரிகள் துரத்திப் பிடித்தனர்.
திரு நிக்கல்சை மீண்டும் பிடித்த அதிகாரிகள், அவரை அடித்து உதைப்பதை வேறோர் காணொளி காட்டியது. அதிகாரிகள் இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, மூன்றாமவர் உதைத்தார். நான்காமவர் தடியடி நடத்தினார். ஐந்தாமவர் திரு நிக்கல்சை குத்தினார். ஜனவரி 7ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ஐந்து அதிகாரி மீதும் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது. கறுப்பினத்தவரான அந்த ஐவரும் கடந்த சனிக்கிழமை காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கடுமையான காயம் காரணமாக மூன்று நாள் கழித்து மருத்துவமனையில் திரு நிக்கல்ஸ் உயிரிழந்தார்.

