வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பராமரிப்பு நிலையங்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் விட்டுச்செல்வது வழக்கம். ஆனால் சீனாவில் ஒரு கடைக்காரர் வியாபாரம் செய்ய செல்லும்போது தனது பிள்ளையைக் கையோடு கூட்டிச்செல்கிறார். ஆனால் அவர் பிள்ளையை அழைத்து செல்லும் விதம்தான் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
தள்ளுவண்டியில் இனிப்புப் பலகாரங்கள் விற்றுவருகிறார் இந்தப் பெண். பார்ப்பதற்கு வழக்கமான தள்ளுவண்டிபோல் தான் காட்சியளிக்கிறது. ஆனால், வண்டிக்குக் கீழ் உள்ள திரையை நீக்கினால், ஒரு கூண்டில் இரண்டு வயது சிறுவன் அடைப்பட்டு இருக்கிறான்.
சிறுவன் சாய்ந்துகொள்ள படுக்கையும் விளையாட சில பொம்மைகளும் கூண்டில் இருக்கின்றன.
இவ்வாறு ஏன் செய்கிறார் என்று அந்தத் தாயைக் கேட்டபோது, தாம் வேலை செய்யும்போது பிள்ளையைப் பார்த்துகொள்ள யாரும் இல்லை என்று அவர் பதிலளித்தார். பிள்ளையின் தந்தை ஓர் உதவாக்கரை என்றும் அவர் எந்நேரமும் கணினியில் விளையாடிகொண்டிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் அவரை நம்பி பிள்ளையை அவருடன் விட்டுச்செல்ல முடியாது என்றார் அவர்.
வேறு வழியின்றி, பிள்ளையைக் கூண்டில் அடைத்து கையோடு வியாபாரத்துக்கு அழைத்து வருகிறார்.
வாடிக்கையாளர்கள் இல்லாத சமயத்தில் பிள்ளையை வெளியேவிட்டு விளையாடவிடுவதாக இந்தத் தாய் கூறினார்.

