சூயஸ் கால்வாயில் சிக்கிய 'எவர் கிவன்' சரக்குக் கப்பல் அண்மையில் உலக கவனத்தை ஈர்த்தது. பெறும் முயற்சிக்குப் பிறகு அந்தக் கப்பல் மீட்கப்பட்டது. எனினும், மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியர்களுடன் அந்தக் கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில்தான் இருக்கிறது. எகிப்திய அதிகாரிகள் அதைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள். கால்வாயை அடைத்து நின்றதால் ஏற்பட்ட இழப்பைச் செலுத்தினால்தான் 'எவர் கிவன்' கப்பலை விடுவிக்க முடியும் என அதன் உரிமையாளர்களுக்கு எகிப்திய அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
தற்போது 'கிரேட் பிட்டர் லேக்' என்ற அகலமான ஏரிப் பகுதியில் 'எவர் கிவன்' கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் சூயஸ் கால்வாயின் ஓர் அங்கம்தான். இங்கிருந்து அனைத்துலக கடல்பகுதியை அடைவதற்கு அக்கப்பல் சூயஸ் கால்வாயில் இன்னும் 90 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். விசாரணை முடிந்து இழப்பீடு செலுத்தப்பட்ட பிறகுதான் கப்பலை விடுவிக்க முடியும் என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசிய அவர், "இழப்பீடு செலுத்த கப்பல் நிர்வாகம் ஒப்புக்கொண்டதும் கப்பலின் பயணத்துக்கு அனுமதி கிடைக்கும்," என்று கூறினார். சூயஸ் கால்வாய் ஆணையத்தின் கணக்குப்படி மொத்த இழப்பீடு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர். கப்பல்கள் செல்வதற்கான கட்டண வருவாயில் ஏற்பட்ட இழப்பு, கப்பலை மீட்க கடல்நீரை வெளியேற்றியதற்கான செலவு, மீட்புக் கருவிகளுக்கான செலவு ஆகியற்றைச் சேர்த்து இழப்பீடு கணக்கிடப்பட்டிருப்பதாக ஒசாமா ராபி கூறினார்.
ஆனால் 'எவர் கிவன்' கப்பலை இயக்கும் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம், இதுவரை சூயஸ் கால்வாய் அமைப்பிடம் இருந்து இழப்பீடு கோரி தனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறியிருக்கிறது.
சூயஸ் கால்வாயிலேயே கப்பல் தொடர்ந்து சிறைபட்டிருக்கும் நிலையில், கப்பல் ஏன் தரைதட்டியது என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், பலமான காற்றே காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால், மனிதத் தவறுகளும் காரணமாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வானிலை காரணமாகவே கப்பல் தரைதட்டியது என்பதை சூயஸ் கால்வாய் ஆணையம் ஏற்கவில்லை.
"மோசமான வானிலையால் கால்வாய் ஒருபோதும் மூடப்பட்டதில்லை," என்கிறார் ராபி.
சம்பவத்துக்கு கப்பலின் அளவு காரணமாக இருக்கலாம் என்பதையும் அவர் மறுக்கிறார். இதைவிட பெரிய கப்பல்கள் எந்தச் சிக்கலும் இன்றி கால்வாயைக் கடந்துசென்று கொண்டிருக்கின்றன என்றும் அவர் வாதிட்டார்.

