அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) வெள்ளை மாளிகையில் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
"பூஸ்டர் தடுப்பூசிகள் முக்கியம். ஆனால் அதைவிட என்ன முக்கியம் என்றால் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கூடுதலானோர் அதைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்," என்று கூறிய அவர், அமெரிக்காவில் ஏறக்குறைய 23 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததைச் சுட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய திரு பைடன், 78, தம் மனைவியும் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று தெரிவித்தார்.
உள்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு மற்ற நாடுகளுக்குக் கூடுதல் தடுப்பூசிகளை அமெரிக்கா விநியோகிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட விமர்சனத்திற்கும் திரு பைடன் பதிலளித்தார்.
"நாங்கள் ஏற்கெனவே உதவி செய்து வருகிறோம். சொல்லப்போனால், மற்ற நாடுகளைவிட நாங்கள் அதிகமாகவே செய்கிறோம்," என்றார் அவர்.

