2020ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரியா மெஸா எனும் 26 வயது அழகி தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியப் பெண் அட்லின் கேஸ்டிலினோ நான்காவது இடத்தைப் பெற்றார்.
69வது பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கசினோவில் நடைபெற்றது. கொரோனா கிருமித்தொற்றுப் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் இரண்டாவது இடம் பிரேசிலிய பெண் ஜூலியா காமாவுக்குக் கிடைத்தது, பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா, 27 மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
இப்போட்டியை ஹாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் மாரியோ லோப்பேஸ், ஒலிவியா கல்போ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

