தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் ரிஷி சுனக்

1 mins read

பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் மோசமான பொருளியல் நெருக்கடியில் உள்ளது. கொவிட்-19ன் பாதிப்பின் அதிர்வலைகளை இன்னமும் உணரமுடிகிறது என்று தாம் பிரதமராக ஆற்றிய முதல் உரையில் அவர் குறிப்பிட்டார். சில முக்கியமான முடிவுகளை தாம் எடுக்கவேண்டும் என்று கூறிய அவர் நாட்டை ஒற்றுமைபடுத்த உறுதியளித்தார். புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பிரிட்டிஷ் மன்னர் சார்லசின் அழைப்பை தாம் ஏற்றுள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் கூறினார். இவர் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவி ஏற்றுள்ளார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக இளையவர் திரு சுனக்.

-

திரு சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷயா மூர்த்தி ஆகியோரின் மொத்த சொத்தின் மதிப்பு 800 மில்லியன் டாலர். பிரிட்டனில் இருக்கும் 250 செல்வந்தர்களில் இவர்களும் அடங்குவர் என்று டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழ் தகவல் அளித்துள்ளது.

திரு சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ஒரு மருத்துவர், தாயார் மருந்தகம் நடத்திவந்தார். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் படித்து திரு சுனக் தேர்ச்சிபெற்றுள்ளார். வங்கியில் வேலைபார்த்த அவர், 2015ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.