போனஸ்: கட்டுக்கட்டாக பணத்தைச் அள்ளிச் சென்ற ஊழியர்கள்

போனஸ்: கட்டுக்கட்டாக பணத்தைச் அள்ளிச் சென்ற ஊழியர்கள்

2 mins read

பெய்ஜிங்: மேடையில் பணக்கட்டுகளை மலைபோல் குவித்து வைத்து, தனது விற்பனை மேலாளர்களுக்குக் கட்டுக்கட்டாக ஆண்டிறுதி போனஸ் வழங்கியுள்ளது சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.

'ஹெனான் மைன்' எனும் பாரந்தூக்கி தயாரிப்பு நிறுவனம், தனது ஊழியர்கள் 70 பேருக்கு 61 மில்லியன் யுவான் (S$11.9 மில்லியன், ரூ.74 கோடி) போனஸ் வழங்கியது.

நிறுவனத்தின் மூன்று சிறந்த விற்பனை மேலாளர்களுக்குத் தலா ஐந்து மில்லியன் யுவான் (S$972,700, ரூ.6 கோடி) வழங்கப்பட்டது. மேலும் 30 பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் யுவான் போனசாகக் கிடைத்தது.

நூறாயிரம் யுவான் கட்டுகளாக மேடையில் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காணொளிகள் காட்டுகின்றன. சிறந்த மேலாளராகத் தேர்வுபெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் தொகையை ஓராளால் தூக்கிச் செல்ல முடியாததால் மற்றவர்கள் அவர்களுக்கு உதவினர்.

அத்துடன், குறிப்பிட்ட நேரத்தில் அதிகப் பணத்தை எண்ணும் போட்டியும் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டிக்காக மட்டும் 12 மில்லியன் பணம் ஒதுக்கி வைக்கப்பட்டது. வேகமாகப் பணம் எண்ணியவருக்கு 157,000 யுவான் (S$30,500, ரூ.19 லட்சம்) பரிசுத்தொகை கிட்டியது.

இந்நிகழ்வு குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சிலர் இதனைக் கண்டு பொறாமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்; வேறு சிலர் இதனை மோசடி நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹெனான் மைன் நிறுவனத்தில் 5,100க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். சென்ற ஆண்டு இந்நிறுவனம் விற்பனை வருவாயாக 9.16 பில்லியன் யுவான் (S$1.78 பில்லியன், ரூ.11,075 கோடி) ஈட்டியது. இது, அதற்கு முந்திய ஆண்டைவிட 23% அதிகம் என அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் கூறுகிறது.

Watch on YouTube