இந்தோனீசியாவின் கேஆர்ஐ நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கி உடைந்துபோனதை அடுத்து, அதில் இருந்த 53 பேரின் சடலங்களையும் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களையும் மீட்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அந்த நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படை அதிகாரிகள் ஒன்றாக இணைந்து பாடிய பிரியாவிடை பாடலைக் காட்டும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு அவர்கள் பாடியதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.
அண்மையில் பதவி விலகிய கடற்படைத் தளபதிக்கு அந்தப் பாடல் அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
அவருக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில் அந்தப் பாடல் அமைந்தது.
"உங்களைவிட்டுச் செல்லவும் நீங்கள் இல்லாமலும் வாழ நாங்கள் தயாராக இல்லை. இருப்பினும், உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறோம். உங்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என்ற பாடல் வரிகள் காணொளியைப் பார்ப்பவரின் மனதை நெகிழவைத்தது.
தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்தும் இந்தோனீசியாவிடமிருந்தும் அந்தக் கடற்படை அதிகாரிகள் விடைபெற்றுக்கொண்டது போல அந்தப் பாடல் அமைந்துள்ளதாகப் பலர் கூறுகின்றனர்.

