'விமான' வீடு: 30 ஆண்டுக் கனவு நனவானது

1 mins read

சியம் ரீப்: சொந்த வீடு கட்டி வசிக்க வேண்டும் என்பது பெரும்பாலும் எல்லாருமே ஆசைப்படுவர். ஆனால், விமானம்போல் வீடு கட்டவேண்டும் என்று எவரும் சொல்லிக் கேட்டிருக்க மாட்டீர்கள்.

ஆம்! கம்போடியாவைச் சேர்ந்த ஒருவர் தமது வீட்டை விமானம்போல் கட்ட வேண்டும் என்று நினைத்தார், இப்போது கட்டியும் விட்டார். கம்போடியாவின் சியம் ரீப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் பாவ், 43.

விமானம்போல் வீட்டைக் கட்ட வேண்டும் என்பது திரு பாவின் 30 ஆண்டுக் கனவு. கனவு இல்லத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டத் தொடங்கினார் பாவ்.

நிலத்திற்கு மேல் ஆறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, இறக்கைகள், இயந்திரக் கட்டமைப்பு எனப் பார்ப்பதற்கு விமானம் போலவே உள்ளது.

இரண்டு படுக்கையறைகளும் இரண்டு குளியலறைகளும் இந்த வீட்டில் உள்ளன.

வீடு இன்னும் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படவில்லை என்றாலும் தாம் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக பாவ் தெரிவித்தார். இதுவரை தமது வீட்டிற்காக ஏறத்தாழ 26,500 வெள்ளி செலவு செய்துள்ளதாகவும் பாவ் கூறினார்.

உலகின் ஆகப் பெரிய கோவில் வளாகமான அங்கோர் வாட் சியம் ரீப்பில்தான் அமைந்துள்ளது.

இந்நிலையில், அவ்வட்டாரத்தில் அங்கோர் வாட் கோவிலுக்குப் பிறகு இனி பாவின் விமான வீடு அதிக பார்வையாளர்களை ஈர்க்கக்கூடும் என்று இணையவாசிகள் சிலர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Watch on YouTube