'வெளிநாட்டு ஊழியர் தளர்வு திட்ட விரிவு குறித்து ஆய்வு'

'வெளிநாட்டு ஊழியர் தளர்வு திட்ட விரிவு குறித்து ஆய்வு'

2 mins read

கோலா­லம்­பூர்: வெளி­நாட்டு ஊழி­யர்­களை அனு­ம­திக்­கும் தளர்வுத் திட்­டத்தை மற்ற துறை­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்த வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை அர­சாங்­கம் ஆராயும் என்று மலே­சிய மனி­த­வ­ளத் துறை அமைச்­சர் வி.சிவக்­கு­மார் தெரி­வித்­தார்.

முக்கியத் துறைகளில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை நிய­மிப்­ப­தற்­கான தளர்­வுத் திட்­டம் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்ட மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு, அந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

மனி­த­வள அமைச்­சின் சீனப் புத்­தாண்டு கொண்­டாட்­டம் ஒன்­றில் கலந்துகொண்ட பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பத்து ­காஜா நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவக்­குமார் இத­னைத் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய தளர்­வுத் திட்­டம் உற்­பத்தி, கட்­டு­மா­னம், உண­வக சேவைத் துறை, தோட்ட, விவ­சா­யம் ஆகிய துறை­கள், அதன் துணைத் துறை­க­ளுக்குப் பொருந்­தும் என்­றார் அவர்.

"தொழி­லா­ளர் தேவை அதி­கம் உள்ள இந்த ஐந்து முக்­கி­ய­மான துறை­க­ளுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­களைக் கொண்டுவர உள்­துறை அமைச்­சும் மனி­த­வள அமைச்­சும் முடிவு செய்­துள்­ளன.

"இந்த முக்­கி­யத் துறை­கள், அதன் துணைத் துறை­களில் வெளி­நாட்டு ஊழி­யர் பற்­றாக்­கு­றையை சரி செய்­த­வு­டன், மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு சில்­லறை விற்­ப­னைத் துறை, பிற துறை­களுக்கு இத்­திட்­டத்தை விரி­வு­படுத்­து­வது குறித்து பரி­சீ­லிப்­போம்," என்று அவர் கூறி­னார்.

தொழில்­து­றை­யில் ஆள் பற்­றாக்­கு­றையை சரி செய்­யும் நோக்­கில், வெளி­நாட்டு ஊழி­யர்­களை நிய­மிப்­ப­தற்­கான தளர்­வுத் திட்­டத்­தின் மூலம், மொத்­தம் 500,000 வெளி­நாட்­டுத் தொழி­லா­ளர்­கள் படிப்­ப­டி­யாக மலே­சி­யா­விற்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று சென்ற புதன்­கி­ழ­மை­யன்று சிவக்­கு­மார் அறி­வித்­தி­ருந்­தார்.

இத்­திட்­டத்­தின் மூலம் ஒதுக்­கீட்­டு நிபந்தனை, வேலை­வாய்ப்புத் தகு­திக்­கான முன்­நிபந்­த­னை­களைப் பூர்த்தி செய்­யா­மல், முதலாளிகள் 15 நாடு­களைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுக்க அனு­ம­திப்­ப­தாக உள்துறை அமைச்­சர் சைபு­டின் இஸ்­மா­யில் சொன்­னார்.