டோங்கா எரிமலை வெடிப்பு, ஜப்பானின் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டு வெடிப்பைவிட பலநூறு மடங்கு சக்திவாய்ந்தது என்று நாசா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஜனவரி 15 அன்று, பசிபிக் தீவுகளில் ஒன்றான டோங்காவுக்கு 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலடி எரிமலைத் தீவு வெடித்தது.
அப்போது அது வானத்தில் 40 கிலோமீட்டர் உயரம்வரை சாம்பலைக் கக்கியதாக நாசா பூமி ஆய்வகம் கூறியது.
சுமார் ஐந்திலிருந்து 30 மில்லியன் டன் டிஎன்டி வெடிமருந்து அளவுக்கான மின்சக்தி, அந்த எரிமலை வெடிப்பின்போது வெளியானது.
ஒப்புநோக்க, 1945இல் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பின் அளவு 15,000 டன் டிஎன்டி மட்டுமே.
வெடிப்பில் அந்த எரிமலைத் தீவு முற்றாக அழிந்துபோனதாக நாசா கூறியது.
வெடிப்பால், டோங்கா தீவு முழுவதும் நச்சு சாம்பலும் விஷ வாயுக்களும் படர்ந்தன.
குடிநீர் நச்சுநீராக மாறியது. பயிரும் இரண்டு கிராமங்களும் அழிந்து போயின.
தீவில் உள்ள 100,000 பேரில் சுமார் 85 விழுக்காட்டினர் நச்சு சாம்பலாலும் எரிமலை வெடிப்பு உருவாக்கிய சுனாமியாலும் பாதிக்கப்பட்டதாக டோங்கா நாடு கூறியது.
சுனாமியால் டோங்காவில் மூன்று பேர் உயிர் இழந்தனர்.
அது உருவாக்கிய பேரலைகள், பெரு வரை சென்று, அங்குள்ள கடற்கரையில் இருவர் மூழ்கி மாண்டனர்.
அந்தப் பேரலைகள் பெரு அருகே இருந்த எண்ணெய்க் கப்பல் மீது மோதியதில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
அதனால் சுற்றுச்சூழல் பேரிடர் நிலையை பெரு அறிவித்துள்ளது.

