‘மலேசியா என் இரண்டாம் இல்லம்’ திட்டத்தின்மூலம் $1.25 பில்லியன் திரட்டு

‘மலேசியா என் இரண்டாம் இல்லம்’ திட்டத்தின்மூலம் $1.25 பில்லியன் திரட்டு

2 mins read
3dd8504c-d8ce-4073-a4d8-729f6d5453dd
பங்கேற்புக் கட்டணம், நிரந்தர வைப்புத்தொகை, சொத்து முதலீடு போன்ற வழிகளில் மலேசியப் பொருளியலுக்குப் பங்களிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: ‘மலேசியா என் இரண்டாம் இல்லம்’ (எம்எம்2எச்) திட்டம் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்நாட்டின் பொருளியலுக்கு 3.87 பில்லியன் ரிங்கிட்டைத் (S$1.25 பில்லியன்) திரட்டித் தந்துள்ளது.

‘எம்எம்2எச்’ பாராட்டு இரவின்போது சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு இத்தகவலைத் தெரிவித்தது. பிப்ரவரி 13ஆம் தேதி நடந்த அந்நிகழ்ச்சியின்போது உரிமம் பெற்ற 245 நிறுவனங்களும் உத்திசார் பங்காளிகளும் தங்களது பங்களிப்புகளுக்காகச் சிறப்பிக்கப்பட்டனர்.

“திருத்தியமைக்கப்பட்ட கொள்கை கடந்த 2024 ஜூனில் நடப்பிற்கு வந்ததிலிருந்து அத்திட்டத்திற்கு 14,535 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆக அதிகமாக, சீனாவிலிருந்து மட்டும் 7,600 விண்ணப்பங்கள் வந்தன. தைவானும் (2,419) ஹாங்காங்கும் (604) அடுத்த நிலைகளைப் பிடித்தன, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் மிகுந்த ஆர்வம் காட்டின,” என்று அமைச்சு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.

பங்கேற்புக் கட்டணங்கள், உள்ளூர் வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை, சொத்து முதலீடுகள் போன்ற வழிகளில் அந்த 3.87 பில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக, இதுநாள்வரை சொத்துகளில் மட்டும் 1.5 பில்லியன் முதலிடப்பட்டுள்ளது. சொத்துச் சந்தை மேலும் 2.3 பில்லியன் முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

“‘எம்எம்2எச்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மேலும் வலுப்படுத்த, விண்ணப்பச் செயல்முறையை இணையம் மூலமாக மின்னிலக்கமயமாக்கி இருக்கிறோம். அத்துடன், அத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கென தனி இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

அத்துடன், அதுசார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக ‘பேங்க் ஆஃப் சைனா’வுடன் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பும் கையெழுத்திடப்பட்டது.

உரிமம் பெற்ற நடத்துநர்களில் இதுவரை எந்த விண்ணப்பத்தையும் அளிக்காதவர்கள், இத்திட்டத்தை அனைத்துலக அளவில் கொண்டுசேர்ப்பதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

“பாதுகாப்பான, போட்டித்தன்மைமிக்க ‘இரண்டாம் இல்லமாக’ மலேசியா தனது நிலையைத் தக்கவைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு, குடிநுழைவுத்துறை, காவல்துறை, வங்கியியல் மற்றும் சொத்துச் சந்தைகள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு இன்றியமையாதது,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்