காஸாவுக்குக் கத்தார் வழங்கும் 1.3 மில்லியன் லிட்டர் எரிபொருள்

காஸாவுக்குக் கத்தார் வழங்கும் 1.3 மில்லியன் லிட்டர் எரிபொருள்

படம்: இபிஏ

18 Sep 2026 - 5:54 pm

1 mins read

டோஹா: காஸாவில் மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், குறிப்பாக சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தொடரவும் சுமார் 1.3 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்குவதாக கத்தார் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) அறிவித்தது.

கத்தார் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி ஸின்ஹுவா செய்தி நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்தது.

காஸா பகுதியில் உள்ள மனிதாபிமானத் தேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான உதவிகளின் ஒரு பகுதியாக, அப்பகுதிக்கு எரிபொருள் விநியோகத்தை எளிதாக்குவதற்காக ஐக்கிய நாட்டு சபையுடன் கத்தார் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்தது.

இந்த மானியம் காஸாவின் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், பல மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் தொடர்ந்து இயங்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் எரிபொருளைச் சார்ந்த சுகாதாரச் சேவைகளால் சுமார் 2.1 மில்லியன் பாலஸ்தீனர்கள் பயனடைகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தார் வெளியுறவு அமைச்சின் தகவலின்படி, 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் 2026 மார்ச் இறுதி வரை காஸாவுக்கு கத்தார் சுமார் 30 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
எரிபொருள்கத்தார்வெளியுறவு அமைச்சு