தோக்கியோ: கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் வாடிய ஜப்பானிய ஆடவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆக நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்ட திரு இவாவ் ஹக்கமடா, குற்றம் புரியவில்லை என்று 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜப்பானின் ஷிசுவோக்கா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து.
அவருக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.87 மில்லியன்) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பானில் இதுவரை ஐந்து மரண தண்டனைக் கைதிகளுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் மறுவிசாரணை கோர அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் திரு ஹக்கமடாவும் ஒருவர்.
அவருக்கு முன்பு நீதிமன்றத்தில் மறுவிசாரணை கோரிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு ஹக்கமடாவுக்கு எதிராகக் காவல்துறை அதிகாரிகள் போலி ஆதாரங்களைச் சமர்ப்பித்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
1966ஆம் ஆண்டில் நால்வர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் திரு ஹக்கமடாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
திரு ஹக்கமடா நிரபராதி என்பதை நிரூபிக்க அவரது சகோதரியும் வேறு சிலரும் பல ஆண்டுகளாக அயராது பாடுபட்டனர். திரு ஹக்கமடாவுக்குத் தற்போது 89 வயது.

