இந்தோனீசியக் காட்டுத்தீயில் 1.9 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதி நாசம்

இந்தோனீசியக் காட்டுத்தீயில் 1.9 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதி நாசம்

கோப்புப் படம்: ஏஎஃப்பி

19 Oct 2026 - 8:27 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியக் காட்டுத்தீச் சம்பவங்களால், 2026ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 1.9 மில்லியன் ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகிவிட்டதாகச் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த கண்காணிப்பு அமைப்பு ஒன்று திங்கட்கிழமை (அக்டோபர் 19) தெரிவித்துள்ளது.

இது லண்டன் நகரத்தைப்போல் கிட்டத்தட்ட 12 மடங்கு பெரிய பரப்பளவாகும்.

கடுமையான எல் நினோ சுழற்சியால் ஜூன் மாதம் முதல் ஏற்பட்ட வறட்சியே கடுமையான காட்டுத்தீச் சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உண்மையான சேதத்தின் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என்று ‘நுசந்தாரா அட்லஸ்’ எனும் காடு அழிப்புக் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனர் டேவிட் காவோ தெரிவித்துள்ளார். அடர்ந்த புகைமூட்டம் செயற்கைக்கோள் படங்களை மறைத்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

தீயை அணைக்க அண்டை நாடான மலேசியா மீண்டும் உதவிசெய்ய முன்வந்தபோதிலும், காட்டுத் தீயை தேசியப் பேரிடராக அறிவிக்க இந்தோனீசிய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். புகைமூட்டச் சூழ்நிலையைக் கையாளும் திறன் தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்தோனீசியக் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக மலேசியாவிலும் கிழக்குத் திமோரிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு தொடர்ந்து 15 நாள்களாக ‘ஆரோக்கியமற்ற’ நிலையில் நீடித்து வருகிறது. இந்நிலையில், காட்டுத்தீக்குக் காரணமான 10 நிறுவனங்களுக்குச் சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு சட்டபூர்வ அறிவிப்புகளை அனுப்பி, உடனடியாகத் தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்