சூதாட்டப் பழக்கத்தில் சிக்கிய சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி, அவரது வளர்ப்புத் தந்தை, சகோதரர் உட்பட பலரை ஏறத்தாழ $1.9 மில்லியன் மோசடி செய்த குற்றத்துக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
டே யீ கொங் என்ற அந்த 29 வயது ஆடவர் அவரது தந்தையிடம் $1.6 மில்லியன் தொகையை ஏமாற்றியுள்ளார். அதில் அரை மில்லியன் தந்தையின் மத்திய சேமநிதிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
தமது தந்தை காவல்துறையுடன் தொடர்பில் உள்ளார் என்பதை அறிந்ததும் அவர் சிங்கப்பூரை விட்டு தென்கொரியாவுக்குச் சென்றுவிட்டார். அங்கு ஒரு கடைக்காரர் அவரை காவல்துறையிடம் சரண் அடையுமாறு அறிவுரை வழங்கியதும் அவர் நாடு திரும்பினார்.
சாங்கி விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
ஒருவரை ஏமாற்றிய இரு குற்றச்சாட்டுகளுடன் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றிய மற்றொரு குற்றமும் அவர்மீது சுமத்தப்பட்டது. மூன்று குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார். அவர்மீது உள்ள 28 இதர குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
வளர்ப்புத் தந்தையுடன் அவர் தமது தம்பியையும் சிங்கப்பூர் ஆயுதப்படையில் உள்ள சக ஊழியரையும் ஏமாற்றினார்.
அவரது 62 வயது வளர்ப்புத் தந்தையிடம் அவர் இதுவரை $37,700 தொகையை திரும்பத் தந்துள்ளார்.
குற்றங்கள் 2023ஆம் ஆண்டு முதல் 2024 வரை செய்யப்பட்டவை. அப்போது குற்றவாளி சிங்கப்பூர் ஆயுதப் படையில் மூத்த மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.


