கோலாலம்பூர்: மலேசியாவில் மூத்தோருக்குச் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படவுள்ளன.
புத்ராஜெயா மாநகராட்சியின்கீழ் இயங்கும் உணவு நிலையங்கள், பொதுச் சந்தைகள், சிறிய கடைகளில் பொள்களை வாங்கும்போது 60 வயதை எட்டிய மூத்த குடிமக்கள் 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடுவரை கழிவுகளைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம் 12 மாதங்களுக்குச் செயல்படுத்தப்படும். அதனுடன் புத்ராஜெயாவில் உள்ள வியாபாரிகளுக்கு வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
வாடகைக் கட்டணக் கழிவுக்குத் தகுதி பெற, இவ்வாண்டு மே மாதம் வரையிலான வாடகைக் கட்டணங்களை வியாபாரிகள் செலுத்தியிருக்க வேண்டும்.
செவ்வாய்க் கிழமை புதிய உதவித் திட்டத்தை அறிவித்த பிரதமர் அலுவலக அமைச்சரான (கூட்டரசுப் பிரதேசங்கள்) ஹன்னா இயோ, அதன் மூலம் 240க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பலனடைவார்கள் என்றார்.
வர்த்தகர்களும் மூத்த குடிமக்களும் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் குறைப்பது சலுகைகளின் நோக்கம் என்று கூறிய அவர், மூத்தோரில் பலருக்கு வருமானம் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“சிறிய வியாபாரிகளில் பலர் சவால்களை எதிர்கொள்வதால் அவர்களை இலக்காகக் கொண்ட உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம். வாடகைத் தள்ளுபடி, மூத்த குடிமக்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும்,” என்றார் அவர்.
புத்ராஜெயாவில் ஜாலான் பி9 உணவு நிலையத்துக்குச் சென்றிருந்தபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
கூட்டரசுப் பிரதேசங்களின் தலைமை இயக்குநர் முஹமட் அஸ்மி முஹமட் ஸைய்ன், பிபிஜே தலைவர் முஹமட் சகேரி அப்துல் காதிர் உடன் இருந்தனர்.
ஏப்ரல் மாதம் கோலாலம்பூர் மாநகராட்சி அறிவித்த திட்டத்தைத் தொடர்ந்து, புதிய உதவி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முந்தைய அறிவிப்பின்படி தலைநகரில் உள்ள சுமார் 10,000 சிறு வணிகர்களுக்கு 2027ஆம் ஆண்டு வரை வாடகைக் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும். மேலும், ஜூலை 1 முதல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் உரிமங்களைப் புதுப்பிக்கும் வணிகர்களுக்குப் புதுப்பிப்புக் கட்டணங்களில் கழிவு கிடைக்கும்.

