பார்க் சிட்டி: அறுவடைக் காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் டீசல் செலவை ஈடுகட்டுவதற்காக, அமெரிக்க வேளாண்மைத் துறை 8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$10.23 பில்லியன்) மதிப்பிலான புதிய அறுவடை எரிபொருள் நிவாரணத் திட்டத்தைத் தொடங்கும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (அக்டோபர் 19) கன்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற இடைப்பருவத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய திரு டிரம்ப், விவசாயிகளுக்கான இந்த உதவித் திட்டத்தை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் நவம்பர் மாத இடைப்பருவத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில், வாக்காளர்களுக்கு அதிபர் டிரம்ப் அளித்து வரும் நிதி ஆதரவு வாக்குறுதிகளின் வரிசையில் இந்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி குறைந்தபட்சப் பெரும்பான்மையை வைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க - இஸ்ரேல், ஈரான் இடையேயான போரினால் எரிபொருள் விலை உயர்ந்துவிட்டதால் அமெரிக்கர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. அந்தச் சூழலை டிரம்ப் கையாண்ட விதம் காரணமாக பொதுமக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவு விகிதம் குறைந்துவிட்டது.
செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், கடும் போட்டி நிலவும் விவசாய மாநிலங்களில் தங்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள டிரம்பும் குடியரசுக் கட்சியினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் பெறும் முறையை விரிவுபடுத்தும் நிர்வாக உத்தரவு ஒன்றில் டிரம்ப் அக்டோபர் தொடக்கத்தில் கையெழுத்திட்டார்.
