ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் உள்ள குவீன் விக்டோரியா நினைவு மணிக்கூண்டு மற்றும் சையத் அல் அத்தாஸ் மாளிகை உட்பட பினாங்கின் 10 பாரம்பரியச் சின்னங்கள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
3.8 மில்லியன் ரிங்கிட் (S$1.2 மில்லியன்)) நிதியைப் பெற்றுள்ள பினாங்குத் தீவு மாநகராட்சி, ஒன்பது திட்டங்களுக்குப் பொறுப்பேற்கும். அதே வேளையில், 500,000 ரிங்கிட் நிதியைப் பெற்றுள்ள ஜார்ஜ்டவுன் உலகப் பாரம்பரிய நிறுவனம் ஒரு திட்டத்தைக் கவனிக்கும்.
தேசியப் பாரம்பரியத் துறையிடமிருந்து பெறப்பட்ட 4.3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளத்திற்குள் உள்ள பொது இடங்களை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று பினாங்குத் தீவு மேயர் ஏ. ராஜேந்திரன் தெரிவித்தார்.
“இது பினாங்கின் பாரம்பரியச் சொத்துகளுக்கான மிக முக்கியமான உத்திபூர்வ முயற்சியாகும். இந்தத் திட்டங்கள் பாரம்பரிய நகரமாக ஜார்ஜ்டவுன் தொடர்ந்து திகழ்வதை உறுதிசெய்யும்,” என்று ஜாலான் பாடாங் கோத்தா லாமாவிலுள்ள பிரௌன் கேலரியில் நடைபெற்ற காசோலை வழங்கும் முன்னோட்ட விழாவில் திரு ராஜேந்திரன் கூறினார்.
இந்த நிகழ்வில் தேசிய மரபுடைமைத் துறையின் இயக்குநர் ஜெனரல் முகம்மது மூடா பஹாதீன், மாநில நிதி அதிகாரி ஸைரி மாட் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சையத் அல் அத்தாஸ் மாளிகை 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த இரு மாடிக் கட்டடமாகும். பினாங்கின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாரம்பரிய வகை 1 கட்டடம், தற்போது மாநகராட்சிக்குச் சொந்தமானது. இது 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் செல்வாக்குமிக்க அச்சே வணிகர் சையத் முகம்மது அல் அத்தாஸின் இல்லமாக இருந்தது.
லைட் ஸ்திரீட்டில் உள்ள 124 ஆண்டுப் பழமையான குவீன் விக்டோரியா நினைவு மணிக்கூண்டு, ராணி விக்டோரியாவின் 60 ஆண்டு ஆட்சியைக் கொண்டாடும் வகையில் உள்ளூர் செல்வந்தர் சியா சென் ஈயோக் என்பவரால் அமைக்கப்பட்டது. அதற்கு அக்காலத்தில் 35,000 ஸ்ட்ரெய்ட்ஸ் டாலர் செலவானது.

