கியவ்: உக்ரேனில் ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் வானூர்தித் தாக்குதல்களில் குறைந்தபட்சம் பத்துப் பேர் உயிரிழந்ததாக பிபிசி செய்தி கூறுகிறது.
தலைநகர் கியவ்வில் பேரளவில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் வியாழக்கிழமை (ஜூலை 2) அதிகாலை நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்த சில மணி நேரங்களில் கியவ் நகர் முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாயின. அதேவேளை அந்த வட்டாரத்தில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேறிவிட்டனர்.
தாக்குதலில் சிக்கி உயிரிழந்த பத்துப் பேரில் குழந்தைகளும் இருந்ததாக கியவ்வின் ராணுவ நிர்வாகத் தலைவர் தைமுர் காச்சென்கோ கூறினார்.
எதிரிகள் மீண்டும் வேண்டுமென்றே குடியிருப்பு வட்டாரங்களையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்கியதாக வியாழக்கிழமை அதிகாலை அவர் தெரிவித்தார்.
ஆனால், உக்ரேன் அண்மையில் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக எரிசக்திக் கூடங்களையே தாங்கள் குறிவைத்ததாக ரஷ்யாவின் ராணுவ அமைச்சு கூறியது.
வியாழக்கிழமை விடிந்தபோது குண்டுவீச்சுகளால் சிதைந்த இடிபாடுகளுக்கு அருகே புகைந்துகொண்டிருந்த கார்களையும் கட்டடங்களையும் காணமுடிந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
கியவ் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும் ஆம்புலன்ஸ் நிலையம் ஒன்று சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.
நகரின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்தனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளிலிருந்து வெளியான வெடிப்புச் சத்தங்கள் இரவு முழுவதும் கேட்டன.
உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் பத்து என உறுதிசெய்யப்பட்ட அதேநேரம் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கியவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.

