தேசிய சேவைத் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்க வந்த 10 பேர்

தேசிய சேவைத் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்க வந்த 10 பேர்

படம்: பெர்னாமா

03 Oct 2026 - 5:17 pm

2 mins read

அலோர் செடார்: மலேசியாவில் அந்நாட்டின் தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் சேர கெபாலா பாட்டாசில் உள்ள 513வது படைப்பிரிவு (வட்டார ராணுவம்) தேசிய சேவைப் பயிற்சி முகாமிற்கு சனிக்கிழமை (அக்டோபர் 3) 10 பேர் தாமாகவே முன்வந்துள்ளனர்.

தேசிய சேவைப் பயிற்சித் துறை தலைமையகத்தின் கொள்கை, மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநரான கர்னல் அப்துல் ரானி அப்துல் மஜித், இத்திட்டம் குறித்துத் தகவல்களை அறிந்த பிறகு இதில் சேர ஆர்வமுள்ளவர்கள் உள்ளனர் என்பதையே இது காட்டுவதாகக் கூறினார்.

“இன்று (அக்டோபர் 3) பதிவு செய்ய குறிப்பிடப்பட்டிருந்த 211 பேரிடமிருந்து உறுதி கிடைத்துள்ளது. மேலும், இன்று காலை நிலவரப்படி 10 பேர் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தாமாகவே வந்து சேர்ந்தனர்,” என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

தங்களது பங்கேற்பை உறுதிசெய்த 211 பேரும் முகாமில் பதிவு செய்ய அட்டவணைப்படுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் 70 விழுக்காடு ராணுவப் பாடங்களும் 30 விழுக்காடு தேசத்தைக் கட்டியெழுப்பும் பாடங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.

பெற்றோரிடமிருந்து கிடைத்துள்ள நேர்மறையான கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களது பிள்ளைகளை தேசிய சேவைத் திட்டத்தில் சேர ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் இளையர்கள், ஐந்து நியமன அதிகாரிகளிடமிருந்து குறிப்பிட்ட தகுதிப் புள்ளிகளைப் பெறுவார்கள். இதன் மூலம் தொடர்புடைய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு முன்னுரிமை அல்லது சலுகைகள் வழங்கப்படும்.

பொதுச் சேவை ஆணையம், ஆயுதப்படை மன்றம், காவல் படை ஆணையம், நீதி மற்றும் சட்டச் சேவை ஆணையம், பொதுச்சேவை தொடர்பான பிற அதிகார அமைப்புகள் ஆகியவையே அந்த ஐந்து நியமன அதிகாரிகளாவர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதேசிய சேவைஇளையர்