தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தான் போராளிக் குழு நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் மரணம்

1 mins read
4f0a6b7f-5e0b-4e12-95d8-fa1e5a67191e
துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்த சுவர்களை பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகள் பார்வையிட்டனர். - படம்: இபிஏ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரான டேரா இஸ்மாயில் கான் அருகே முகாம் ஒன்றின் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 10 எல்லைக்காவல் படையினர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் எல்லை ஓரம் உள்ள அந்தப் பகுதியில் வியாழக்கிழமை (அக்டோபர் 24) நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்கு ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP)‘ என்னும் போராளிக் குழு பொறுப்பேற்று உள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் தென்பகுதியில் இனப் பிரிவினைவாதக் கிளர்ச்சி அதிகரித்து வரும் நிலையிலும் வடமேற்கு வட்டாரத்தில் போராளிகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி இருக்கும் நிலையிலும் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாக்குதலை உறுதிசெய்த மூன்று மூத்த காவல்துறை அதிகாரிகள், ஏராளமானோரை உள்ளடக்கிய பெரிய போராளிக் குழு ஒன்று எல்லைக்காவல் படையினரின் புறநகர் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினர்.

தாக்குதல் நடைபெற்ற கைபர் பக்துன்குவா மாநில முதலமைச்சர் அலி அமின் கான் கன்டாபுர், சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

இதற்கிடையே, மூத்த தலைவரான உஸ்தாத் குரேஸி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ‘தெஸ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP)‘ போராளிக் குழு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்