புத்ரஜெயா: மலேசியாவில் இப்போது 10 வயது பிள்ளைகளும் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் அகமது ஸாகித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தொடக்கப் பள்ளி மாணவர்களை ஈர்க்க போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மிட்டாய்களில் போதையைக் கலப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் போக்கைக் கல்வி அமைச்சு, பாலர்பள்ளிகள் இரண்டிடமும் தாம் தெரியப்படுத்தியிருப்பதாக திரு அகமது ஸாகித் கூறினார் என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது. மோசமடையும் இந்த அச்சுறுத்தலிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க ஆசிரியர்கள், பெற்றோர், சமூகங்கள் ஒன்றிணையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவைக் குழுவுக்குத் தலைமை தாங்கும் திரு அகமது ஸாகித், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, மேம்பட்ட அமலாக்க நடடிவக்கைகள், மறுவாழ்வுத் திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் புதிய உத்திகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
குற்றங்களை அடையாளம் காண மாறுபட்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு திரு அகமது ஸாகித், தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பு (ஏஏடிகே) போன்றவற்றைக் கேட்டுக்கொண்டார். மின்வர்த்தகத் தளங்களில் வாங்கப்படும் பொருள்களை விநியோகிக்கும் போர்வையில் போதைப்பொருள்களைக் கடத்துபவர்களை அடையாளம் காணும் முறைகளும் அவற்றில் அடங்கும்.
கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து ஆக அதிகமான போதை புழங்கிகள் இருந்து வருவதாக திரு அகமது ஸாகித் குறிப்பிட்டார்.
மலேசியாவில் போதைப்பொருள் பிரச்சினை மோசமடைந்து வருகிறது. அந்நாட்டில் போதை அடிமைகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு ஒவ்வொரு 100,000 பேருக்கும் 586ஆகக் கூடியது. 2023ல் அந்த எண்ணிக்கை 436ஆக இருந்தது.
இவ்வாண்டு ஜூன் மாதம் வரை அந்த எண்ணிக்கை 396ஆகப் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்பிரச்சினைக்குச் சம்பந்தப்பட்டோர் முறையாகப் பொறுப்பேற்க வகைசெய்ய 2026லிருந்து 2030ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு ஏஏடிகே உத்திபூர்வ திட்டம் ஒன்றை வரைந்து வருவதாக திரு அகமது ஸாகித் தெரிவித்தார். போதைப்பொருள் எதிர்ப்புக் குறியீடு (anti-drug index), பழக்கத்திலிருந்து மீண்டுவருவோர் விகிதம், பாதிக்கப்பட்டோர் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தகவல்கள், பொதுமக்களிடையே இருக்கும் விழிப்புணர்வு போன்ற அம்சங்கள் அத்திட்டத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.