கோலாலம்பூர்: மலேசியாவின் பிரதமர் ஆட்சியில் இருக்கக்கூடிய தவணைக்காலத்துக்கு 10 ஆண்டுகளாக உச்சவரம்பு விதிக்க அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படவேண்டும் என்பது தங்கள் விருப்பம் என அந்நாட்டின் ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) கூறியுள்ளது.
அதேவேளை, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் தாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கப்போவதாகவும் அக்கட்சி ஞாயிற்றுக்கிமை (மார்ச் 16) குறிப்பிட்டது என்று மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்தப் பரிந்துரையை திரு அன்வார் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்த ஈராண்டுகளில் அரசியலமைப்புச் சட்டத்தில் இரு மாற்றங்கள் செய்யப்படத் தமது கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவ்விரு மாற்றங்களில் பிரதமரின் தவணைக்காலத்துக்கான உச்சவரம்பு விதிக்கப்படுவதும் அடங்கும் என்றும் டிஏபி தலைமைச் செயலாளர் ஆன்டனி லோக்.
“அன்வார் பணியாற்றுவதை நிறுத்துவது எங்கள் எண்ணம் அல்ல. இந்த மாற்றத்தைச் செய்து நாட்டின் அரசியல் முறைக்கு மாற்றம் கொண்டுவந்த பெருமை அவரைச் சேரவேண்டும் என்றே விரும்புகிறோம்.
“அதேவேளை, 16வது பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் இருப்பதற்கு டிஏபி, திரு அன்வாருக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கக் கடமைப்பட்டுள்ளதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
“தற்போதைய ஒற்றுமை அரசாங்கமாக இருந்தாலும் சரி புதிய அரசாங்க முறை தலைதூக்கினாலும் சரி, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைப் பிரதிநிதிக்கும் பிரதமர் வேட்பாளர் அன்வாரைத் தவிர வேறு யாராகவும் இருக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம்,” என்று டிஏபியின் 18வது தேசிய மாநாட்டில் மலேசியப் போக்குவரத்து அமைச்சருமான திரு லோக் விவரித்தார்.
பிரதமரின் தவணைக்காலத்துக்கு உச்சவரம்பு விதிப்பதற்கு வழிவிடும் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யவேண்டும் என்ற திரு லோக்கின் பரிந்துரை நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் பரிந்துரைக்குத் தாம் ஆதரவளிப்பதாக திரு அன்வார் தெரிவித்துள்ளதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதேநேரம், அனைத்து கட்சிகளிலும் மூன்றில் இரண்டு பங்குக் கட்சிகளாவது ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் சுட்டினார்.
“பிரதமரின் அதிகபட்சத் தவணைக்காலத்தை 10 ஆண்டுகளுக்குக் குறைக்கும் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். தவணைக்காலம் 22 ஆண்டுகளுக்கு நீடித்தால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
“என்னைப் பற்றிக் கவலைப்படாதீர். எனது தவணைக்காலம் 10 ஆண்டுகளைத் தாண்டாது. ஈராண்டுகளுக்குப் பிறகே நான் களைப்படைந்துவிட்டேன்,” என்றார் திரு அன்வார்.
இதற்கிடையே, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி, அரசாங்க வழக்கறிஞர் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க வகைசெய்யும் மாற்றத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யுமாறு திரு லோக் பரிந்துரைத்திருக்கிறார்.