பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கம், 10 ஆண்டுகள்வரை பயன்படுத்தக்கூடிய கடப்பிதழ்களை அறிமுகம் செய்துள்ளது. அரசாங்க அரசிதழின் புதிய கட்டணமுறையின்கீழ் அந்தக் கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட் ($112) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடப்பிதழ்கள், விசாக்களுக்கான கட்டணமுறை சட்டத்தில் இவ்வாண்டு பிப்ரவரி 16ஆம் தேதி செய்யப்பட்ட திருத்தம் மத்திய அரசாங்க அரசிதழில் புதன்கிழமை (ஜூன் 3) வெளியிடப்பட்டது.
அதன்கீழ் 18 வயதிலிருந்து 59 வயதுக்கு இடைப்பட்டோர், 10 ஆண்டுகள்வரை செல்லுபடியாகக்கூடிய கடப்பிதழுக்கு 350 ரிங்கிட் செலுத்தவேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கடப்பிதழுக்கு 175 ரிங்கிட் செலுத்தினால் போதும்.
18 வயதுக்கு மேல் உடற்குறையுள்ள குடிமக்களுக்குப் புதிய கடப்பிதழ் இலவசமாக வழங்கப்படும். அத்தகையோர், உடற்குறையுள்ளோருக்கான ‘ஒகெயு’ அட்டையை வைத்திருப்பது அவசியம்.
இருப்பினும், புதிய கடப்பிதழுக்கான விண்ணப்பங்களை எப்போதிலிருந்து சமர்ப்பிக்கலாம், பொதுமக்களுக்கு அவை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டனவா போன்ற விவரங்களை மலேசியக் குடிநுழைவுத் துறை, ஜூன் 4ஆம் தேதி நிலவரப்படி, இன்னும் உறுதிசெய்யவில்லை.
அதிகாரிகளும் குடிநுழைவுத் துறை ஊழியர்களும் புதிய கடப்பிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்வர்.
குடிநுழைவுத் துறை ஐந்து ஆண்டுகள் வரைக்கும் செல்லுபடியாகக்கூடிய கடப்பிதழ்களை மட்டுமே இதுவரை வழங்கியுள்ளதால் புதிய கடப்பிதழ் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. ஐந்து ஆண்டுகள்வரை பயன்படுத்தக்கூடிய கடப்பிதழுக்கான கட்டணம் தற்போது 200 ரிங்கிட்.
தொடர்புடைய செய்திகள்
சேதமடைந்த அல்லது தொலைந்துபோன கடப்பிதழ்களுக்குப் பதிலாக வேறொரு கடப்பிதழைப் பெற முற்படுவோருக்கான கட்டணங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டது.
18 வயதிலிருந்து 59 வயதுக்கு இடைப்பட்டோர் வேறொரு கடப்பிதழைப் பெற முதல்முறை 550 ரிங்கிட் செலுத்தவேண்டும். இரண்டாவது முறை 850 ரிங்கிட்டும் மூன்றாவது முறைக்கு மேல் 1,350 ரிங்கிட்டும் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.
சேதமடைந்த, தொலைந்துபோன கடப்பிதழுக்குப் பதிலாக வேறொரு கடப்பிதழைப் பெற விரும்பும் மூத்த குடிமக்கள், முதல்முறை 375 ரிங்கிட்டும் இரண்டாவது முறை 675 ரிங்கிட்டும் மூன்றாவது முறைக்கு மேல் 1,175 ரிங்கிட்டும் செலுத்தவேண்டும்.

