சோல்: தென்கொரியக் காவல்துறை வெளிநாட்டு ஊழியர்களைத் துன்புறுத்துவோருக்கு எதிராக 100 நாள் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது.
வன்முறை, துன்புறுத்தல், சிறை வைத்தல், வற்புறுத்தல், அவனமானப்படுத்துதல், பாலியல் வன்கொடுமை, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல் ஆகிய குற்றங்களைக் கண்டுபிடிக்க தென்கொரியாவின் 18 வட்டாரக் காவல்துறை அமைப்புகள் சிறப்புப் பிரிவுகளை அமைத்துள்ளன. அந்தப் பிரிவுகள் நவம்பர் 25ஆம் தேதி வரை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இலங்கை ஊழியர் ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் எனும் பாரந்தூக்கிமீது கட்டப்பட்டு தரையிலிருந்து தூக்கியபடி இருக்கும் காட்சி இணையத்தில் பரவியதை அடுத்து நாடளவில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தெற்கில் உள்ள ஜியோல்லா மாநிலத்தின் நான்ஜூ என்ற பகுதியில் உள்ள செங்கல் தொழிற்சாலையில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்த இலங்கை ஊழியரைத் தென்கொரியாவைச் சேர்ந்த பாரந்தூக்கி ஓட்டுநர் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர் ஊழியர் செய்த தவற்றுக்காக அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
அவசர எண் 112க்கு வரும் அழைப்புகளையும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் பலகலாசார அமைப்புகளும் நடத்தும் வெளிநாட்டு ஊழியர் ஆதரவு நிலையங்கள் தரும் தகவல்களையும் வைத்து காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட சம்பவங்களை விசாரிக்கவிருக்கின்றனர். தேவை ஏற்பட்டால் அவர்கள் அதிகாரபூர்வ விசாரணையைத் தொடங்குவர்.
வேலையிடச் சோதனைகளை நடத்த தென்கொரிய வேலை நியமன, ஊழியரணி அமைச்சுடன் இணைந்து செயல்படவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தென்கொரியாவில் உள்ள இலங்கைத் தூதர் திருவாட்டி சாவித்ரி பனபொக்கே, ஆகஸ்ட் 17ஆம் தேதி நான்ஜூவுக்குச் சென்று வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைகளுக்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.