ஆர்டிஎஸ் சேவையில் 100 குடிநுழைவு மின்வாயில்கள்

மின்வாயில்கள் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் பயண அனுபவத்தை மேம்படுத்தும்

ஆர்டிஎஸ் சேவையில் 100 குடிநுழைவு மின்வாயில்கள்

2 mins read
b5176f1e-df64-47cd-9044-c2b4bcc76cb9
புக்கிட் சாகார் ஒருங்கிணைந்த குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்துதல் (ICQ) வளாகத்தில் 100 மின்வாயில்கள் அமைக்கப்படும். - படம்: சாவ்பாவ்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் போக்குவரத்து இணைப்பில் 100 குடிநுழைவு மின்வாயில்கள் இருக்கும்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான குடிநுழைவுச் சோதனைகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய புக்கிட் சாகார் ஒருங்கிணைந்த குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்துதல் (ஐசிகியூ) வளாகத்தில் மின்வாயில்கள் அமைக்கப்படும்.

புதிய மின்வாயில்கள் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் உள்ள பொதுவான குடிநுழைவுச் சோதனைகளை ஒருங்கிணைக்கும் என்றார் மலேசிய விரைவு ரயில் போக்குவரத்துக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது சாரிஃப் ஹ‌ஷிம்.

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் பயணிகள் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்குமான குடிநுழைவு நடைமுறையை ஒரே முறையில் பூர்த்திசெய்ய ஐசிகியூ வளாகத்தில் உள்ள மின்வாயில்கள் வகைசெய்யும் என்றார் அவர்.

பயணிகள் அனைவரும் குடிநுழைவு நடைமுறைகளைக் குறிப்பாக உச்சநேரங்களில் சுமுகமாக முடிக்க அதிநவீன மின்வாயில் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் திரு முகமது சாரிஃப்.

“100 மின்வாயில்களுடன் புக்கிட் சாகார் ஐசிகியூ வளாகத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ள 10 பாதுகாப்புச் சோதனை தடங்களும் அமைக்கப்படும். அத்துடன் 18 பயணப் பெட்டிகளைச் சோதனையிடும் வசதி கொண்ட தடங்கள், பயணப் பெட்டிகள் இல்லாமல் வரும் பயணிகளுக்குச் சிறப்பு சோதனைத் தடங்கள் என நெரிசலைக் குறைக்க பல வசதிகள் செய்யப்படும்,” என்று திரு முகமது சாரிஃப் குறிப்பிட்டார்.

மலேசியா, சிங்கப்பூர் என இருநாட்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் நெருக்கமான ஒத்துழைப்பால் கியூஆர் குறியீட்டு வசதியுடன் கூடிய மின்வாயில்கள் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

பயணிகள் தங்கள் பயணங்களை இன்னும் சரியான முறையில் திட்டமிட மின்வாயில்கள் பெரியளவில் கைகொடுக்கும் என்ற அவர், ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் போக்குவரத்துச் சேவை தொடங்கும்போது ஒவ்வொரு நாளும் 40,000 பேர் ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அந்த எண்ணிக்கை கட்டங்கட்டமாக நாள் ஒன்றுக்கு 140,000 பயணிகள் வரை அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்