கோலாலம்பூர்: ‘சாரா’ உதவித் திட்டத்தின்கீழ் 22 மில்லியன் மலேசியர்களுக்கு ஒரு முறை நூறு ரிங்கிட் வழங்கும் திட்டம் தேசிய நாளையொட்டி ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்கி வைக்கப்பட்டது.
பிரதமர் அன்வார் இப்ராகிம், அந்த ரொக்க உதவி, ‘மைகேட்’ (MyKad) வழியாக நேரடியாக வழங்கப்படும் என்றார்.
இதனைக் கொண்டு 14 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமான பொருள்களை வாங்கப் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மைடின், லோட்டசஸ், இக்கான்சேவ், 99 ஸ்பீட்மார்ட் போன்ற பேரங்காடி உட்பட நாடு முழுவதும் உள்ள 4,100 இடங்களிலும் எல்லா மாவட்டங்களில் உள்ள சில்லறைக் கடைகளிலும் உதவித் தொகையை பயன்படுத்தலாம்.
வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான உடனடி முயற்சியாக ஒரு முறை ரொக்கம் வழங்கப்படுகிறது என்று நிதி அமைச்சருமான அன்வார் சொன்னார்.
இந்த உதவியால் 22 மில்லியன் குடியிருப்பாளர்கள் பலனடைவார்கள். இதற்காக மொத்தம் இரண்டு பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ‘சாரா’ உதவித் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 13 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 15 பில்லியன் ரிங்கிட்டுக்கு அதிகரித்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக விதிவிலக்கு இல்லாமல் அனைத்து பெரியவர்களுக்கும் பண உதவி விநியோகிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2025 ஜூனில் ஒட்டுமொத்த பணவீக்கம் 52 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.1 விழுக்காடாக இருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டிய பிரதமர் அன்வார், உணவு மற்றும் பானங்களின் விலை உயர்வு இன்னும் சராசரி பணவீக்கத்தைவிட அதிகமாக உள்ளதால் அதனை உடனடியாக விவேகமாக சமாளிக்க வேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.