சிங்கப்பூர் முழுவதும் ஜூலை மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் $34,000க்கும் மேற்பட்ட மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 100 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
சோதனைகள் ஜூலை 12 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் தீவின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. அவற்றில் பூன்லே, கிம்மோ, ஜூரோங், காலாங், தெங்கா, தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்கள் அடங்கும்.
மொத்தம் 859 கிராம் கஞ்சா, 120 கிராம் ஹெராயின், 85 கிராம் ஐஸ், 3 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், இரண்டு எரிமின்-5 மாத்திரைகள், ரொக்கமாக $252.75 ஆகியன அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் சில போதைப்பொருள்கள் 228 போதைப் புழங்கிகளுக்கான ஒரு வார பயன்பாட்டுக்குத் தேவைப்படும் அளவுக்கு இருந்தன என்று சிஎன்பி குறிப்பிட்டது.
சந்தேக நபர்களில் 28 வயது சிங்கப்பூரர் ஒருவரின் மோட்டார்சைக்கிளையும் புக்கிட் பாஞ்சாங் பகுதியில் உள்ள வீட்டையும் ஜூலை 14 அன்று சோதனையிட்டதில் மரண தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு கஞ்சா உட்பட இதர போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜூலை 15 அன்று சுங்கத் துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளுடன் சிஎன்பி ஜூரோங் வட்டாரத்தில் உள்ள ஊழியர் தங்குவிடுதியில் நடத்திய சோதனையில் 22 முதல் 40 வயதுக்குட்பட்ட ஒன்பது பங்ளாதேஷ் ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

