வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதியாகும் மேலும் பல பொருள்கள்மீது அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் பேரளவில் வரி விதித்துள்ளார்.
அதன்படி, நிறுவன அடையாளம் கொண்ட (branded), காப்புரிமை உள்ள மருந்துகளுக்கு அமெரிக்கா 100 விழுக்காடு வரி விதித்துள்ளது. மேலும், கனரக லாரிகள் உள்ளிட்டவற்றுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும்.
சமையலறை அறைகலன்கள், குளியலறை அலங்கார வேலைப்பாடுகள் ஆகியவற்றுக்கு 50 விழுக்காடு வரியும் துணி, தோல் மற்றும் இதரப் பொருள்களால் போர்த்தப்பட்டு மென்மையாக்கப்பட்ட (upholstered) அறைகலன்களுக்கு 30 விழுக்காடு வரியும் விதிக்கப்போவதாக திரு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய வரிவிதிப்புகள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நடப்புக்கு வரும். இத்தகைய பொருள்களை மற்ற நாடுகள், அமெரிக்காவில் ‘குவிப்பதே’ இவ்வாறு வரி விதிப்பதற்குக் காரணம் என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
நிறுவன அடையாளம் கொண்ட அல்லது காப்புரிமை பெற்ற எல்லா மருந்து வகைகளுக்கும் புதிய 100 விழுக்காடு வரி பொருந்தும். ஏற்கெனவே அமெரிக்காவில் உற்பத்தி ஆலை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துள்ள பிற நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
திரு டிரம்ப்பின் அரசாங்கம், நாட்டுக்கு வருமானம் ஈட்டும் முக்கிய நடவடிக்கையாக வரிவிதிப்பு பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் வாஷிங்டன் 30 பில்லியன் டாலர் (S$38.8 பில்லியன்) வரி ஈட்டக்கூடும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். அத்தொகை, அண்மைக் காலமாக ஆண்டுதோறும் திரட்டப்பட்டதில் மும்மடங்கிற்கும் அதிகமாகும்.
திரு டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்று வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிய பிறகு ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்டவற்றுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது. அதன்படி, அப்பகுதிகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், பகுதி மின்கடத்தி, மருந்துகள் போன்ற பொருள்களுக்கு வரி உச்சவரம்பு உள்ளது.
அந்த வகையில், இப்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள், அப்பகுதிகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களை அநேகமாகப் பாதிக்க மாட்டா.

