தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100,000 பேர் திரண்ட மலேசிய தேசிய நாள் கொண்டாட்டம்

2 mins read
73bbff67-7772-4ac0-9284-7b2eea22119c
மலேசிய தேசிய நாளில் பங்கேற்ற கலைஞர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

புத்ராஜெயா: மலேசியாவின் தேசிய நாள் கொண்டாட்டத்தில் 100,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை டத்தாரான் புத்ராஜெயாவில் தேசிய நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், அவரது மனைவி ராஜா ஸரித் சோஃபியா ஆகியோரும் அதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காலை 8.00 மணியளவில் அவர்கள் வந்தனர். அவர்களாது எதிர்பாராத வருகையால் கூட்டத்திலிருந்து கரவொலியும் பலத்த கைதட்டலும் எழுந்தது.

மாமன்னர் இப்ராகிம், தனிப்பட்ட ‘WWW1’ பதிவு எண் கொண்ட நீலநிற புரோட்டான் சட்ரியா நியோ காரை தானே ஓட்டி வந்தார்.

அரச மேடைக்கு வந்த அவர்களை, 2025ஆம் ஆண்டின் மலேசிய தேசிய நாள் முக்கிய ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சிலும் அவரது மனைவி அஸ்ரினா புத்ரி முஹமட் மாயூதீனும் வரவேற்றனர்.

அவர்களுடன் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அவரது மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் மற்றும் அரசாங்க அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டு, ‘மலேசிய பண்பாடு பொதுமக்களுக்கான பெருந்தொண்டு’ என்ற கருப்பொருளில் அணிவகுப்பை 14,062 பேருக்கு மேல் நடத்தினர். பொருளியல், தொலைத் தொடர்பு, புத்தாக்கத் தொழில்துறை, விளையாட்டு, தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த குழுக்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.

இவ்வாண்டு ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்று பங்காற்றுவதை பறைசாற்றும் வகையில் குழுவும் அணிவகுத்துச் சென்றது.

இது தவிர மலேசிய பண்பாட்டின் சிறப்புக் கலை நிகழ்ச்சியை 1,000 பேருக்கு மேல் படைத்தனர்.

2025 தேசிய தினம் மற்றும் மலேசிய தின கருப்பொருள் பாடலைப் பாடகர் சிட்டி நூர்ஹலிசா பாடியது கூட்டத்தை வெகுவாகக் கவர்ந்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதேசிய நாள் கவிதைகள்கொண்டாட்டம்மாமன்னர்