சோல்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பகுதிமின்கடத்தி உள்ளிட்ட துறைகளில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, வெளிநாட்டுத் திறனாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் தென்கொரியா இறங்கியுள்ளது.
2040ஆம் ஆண்டிற்குள் யோங்கின், குவாங்ஜூ ஆகிய பகுதிகளில் புதிய பகுதிமின்கடத்தி உற்பத்தி நிலையங்களை அந்நாடு விரிவாக்கம் செய்யவுள்ளது.
அதனால், கூடுதலாக 100,000 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
அந்நாட்டில் நிலவும் குறைந்த பிறப்பு விகிதம், உள்நாட்டு ஊழியர்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் வெளிநாட்டு மாணவர்களையும் வல்லுநர்களையும் அது பெரிதும் நம்பியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் அந்நாட்டின் சுங்கிவுன்குவான் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிலையங்கள் இணைந்து சிறப்புப் பாடத்திட்டங்களை நடத்துகின்றன.
அங்குப் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம், வேலைப்பயிற்சி, படிப்புக்குப் பின் வேலைவாய்ப்புடன் கூடிய திட்டம் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
2025ஆம் ஆண்டில் மட்டும் அங்கு 550க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் பொறியியல் துறைகளில் பயின்று வருகின்றனர்.
தென்கொரிய அரசாங்கத்தின் 'ஸ்டடி கொரியா 300கே' (Study Korea 300K) திட்டத்தின் கீழ், அந்நாட்டில் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் அது எட்டப்பட்டது.
அத்துடன், 'கே-ஸ்டார்' (K-STAR) விசா திட்டம் மூலம், திறமைமிக்க வெளிநாட்டு அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்கள் மிக விரைவாக நிரந்தரக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளான வியட்னாம், மியன்மார், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் அத்தகைய திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தென் கொரியாவில் உயர்கல்வி, தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

