'வோக்' இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்த 106 வயது கலைஞர்

2 mins read
bb4d2172-e0e4-4589-b94c-52996d09664f
படம்: வோக் -

பிலிப்பீன்ஸ் நாட்டு ஆதிக்குடியைச் சேர்ந்த 106 வயது பச்சை குத்தும் கலைஞர், அங்குள்ள ஒரு மாத இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார்.

'வோக்' என்ற அந்த உலகப் புகழ்பெற்ற மாத இதழ், உலகில் புதிதாக உருவாக்கப்படும் புதுமையான ஆடை அலங்காரம், அழகியல் மற்றும் புதுமையான வாழ்க்கைப் பாணி போன்றவை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில் 2023 ஏப்ரல் மாதத்திற்கான அந்த இதழ் மணிலாவின் ஆதிக்குடியைச் சேர்ந்த ஏப்போ வாங்-ஆட் என்ற 106 வயது மூதாட்டி (படம்) ஒருவரின் படத்தைக் கொண்டு தனது அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளது. இவர் மரியா ஓகே என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆதிக்குடிகளுக்கே உரித்தான வகையில் தனது உடலில் பச்சைக்குத்தி ஓவியத்தால் அழகுபடுத்திக்கொண்டு அந்த மாத இதழின் புகைப்படத்திற்குக் காட்சி தருகிறார்.

பிலிப்பீன்ஸின் கலிங்கா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள புஸ்கலம் என்னும் சிற்றூரில் வசித்து வருகிறார் மூதாட்டி வாங்-ஆட். பச்சை குத்துவதில் வல்லவரான மரியாவைத் தேடி வந்து பெண்கள் பச்சைக் குத்திக் கொள்கிறார்களாம்.

கலிங்கா மாநிலத்தின் பட்-பட் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வாங்-ஆட். அந்த இனத்தவர்கள் பச்சை குத்துவதை வீரத்தையும் அழகையும் பறைசாற்றும் சின்னமாகக் கருதுகின்றனர்.

நாளடைவில் பச்சைக் குத்துவது காட்டுமிராண்டித் தனம், மூடத்தனம் என்று பலரால் கேலி செய்யப்பட்டும் ஆதிகுடிகளிடம் பச்சைக் குத்தும் பழக்கம் தொடர்கிறது. பச்சைக் குத்திக் கொள்வதற்கு தன்னை நாடி வரும் ஆதிக்குடி பெண்களுக்கு தாம் பச்சைக் குத்தி உற்சாகப்படுத்தி வருவதாகக் கூறினார் வாங்-ஆட்.

திருவாட்டி வாங்-ஆட் தங்களின் வோக் பிலிப்பீன்ஸ் மாத இதழின் அட்டைப் படத்தில் பிரசுரிப்பதன் வாயிலாக, பிலிப்பீன்சின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் வாங்-ஆட் பிரதிபலிப்பார் என்று உணர்ந்ததாக 'வோக் பிலிப்பீன்ஸ்' மாத இதழின் ஆசிரியல் பீ வால்டெமஸ், சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.