கோலாலம்பூர்: மலேசியாவின் வீடமைப்பு, உள்ளூர் அரசாங்கம் அமைப்பு, 109 வீடமைப்பு சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள், சரிவரச் செயல்படவில்லை என்று கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன (blacklisted).
அதனால் அந்தச் சொத்து மேம்பாட்டாளர் நிறுவனங்கள் விற்கும் வீடுகளை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு விதிமீறல்கள் காரணமாக அவை அவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மலேசிய வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சர் கா கோர் மிங் தெரிவித்தார். இதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை வேறு பெயர்களில் பதிவுசெய்துத் தொடங்கவும் அவற்றின் இயக்குநர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடந்துவரும் ‘கட்டுப்படியான விலையில் வீடமைப்புத் திட்ட மாநாட்டில்’ (Affordable Housing Projects Conference) கலந்துகொண்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கா கோர் மிங் வெளியிட்டார். அந்த மாநாடு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நடந்தது.
சரிவரச் செயல்படவில்லை என்று பட்டியலிடப்பட்டுள்ள 109 நிறுவனங்களைத் தமது அமைச்சின் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று திரு கா தெரிவித்தார். அதன் மூலம் வீடுகளை வாங்குவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் நிலைமை குறித்துத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்னும் நிறைவுபெறாத வீடமைப்புத் திட்டங்களைக் கையாளும், சரிவரச் செயல்படவில்லை என்று கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சொத்து மேம்பாட்டு நிறுவனங்களுக்குத் தற்போதைக்குப் புதிய திட்டங்கள் ஏதும் வழங்கப்படாது.