காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 குழந்தைகள் உட்பட 13 பேர் மாண்டுவிட்டதாகப் புதன்கிழமையன்று (ஜூன் 10) ஆப்கானிஸ்தான் தெரிவித்தது.
தலிபான்களின் தலைமை செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனர் மற்றும் பக்திகா ஆகிய மாநிலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதில் மேலும் 14 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் முதியவர் ஒருவர், பெண் ஒருவர், 11 சிறுவர்கள் ஆகியோர் அடங்குவர்.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வடமேற்கு கைபர் பக்துன்வா மாநிலத்தில் உள்ள ஹசன் கெல் பகுதியில், பாகிஸ்தானியத் தலிபான் போராளிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர், பாதுகாப்புச் சாவடி ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஆறு பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 9) நிகழ்ந்தது.
தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படையினர் எட்டு போராளிகளையும் சுட்டுக்கொன்றனர். தாக்குதல் நடந்த அடுத்த நாளே பாகிஸ்தான் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்தச் சம்பவங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றநிலை, பகையுணர்வு அதிகரித்துள்ளது.

