ஹனோய்: வியட்னாமில் போதைப்பொருள் கடத்தல் வழக்குத் தொடர்பில் 11 பேர்க்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து ஹோ சி மின் சிட்டிக்குச் சென்ற வியட்னாம் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 157 பற்பசைக் குழல்களில் பத்துக் கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பெண்கள் நால்வரும் தங்களை அறியாமலேயே போதைப்பொருளைக் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, பயனீட்டுப் பொருள்கள் என்ற போர்வையில், பிரான்சிலிருந்து வியட்னாமிற்குப் போதைப்பொருள்களைக் கடத்திய அனைத்துலகக் கும்பலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இவ்வழக்கில் மொத்தம் 227 பேர்மீது குற்றம் சுமத்தப்பட்டதக விஎன்எக்ஸ்பிரஸ் ஊடகச் செய்தி தெரிவித்தது.
சங்கேதக் குறுஞ்செய்தித் தளங்கள், மற்றவர்களின் பெயர்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் விநியோகச் சேவைகளைப் பயன்படுத்தி அக்கும்பலைச் சேர்ந்தோர் வியட்னாமின் தென்பகுதியில் போதைப்பொருள்களை விநியோகம் செய்துவந்தனர்.
இந்நிலையில், ஹோ சி மின் சிட்டி மக்கள் நீதிமன்றம் அவர்களில் 11 பேர்க்கு மரண தண்டனையும் குறைந்தது 20 பேர்க்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
தனது குற்றவியல் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து வியட்னாம் அரசு பரிசீலித்து வரும் வேளையில் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, போதைப்பொருள் கடத்தல் உட்பட ஆறு குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்க அரசு முன்மொழிந்துள்ளது. இருப்பினும், அந்த மாற்றங்கள் இன்னும் நடப்பிற்கு வரவில்லை.


