விபத்துகளை ஏற்படுத்தி, பணம் பறித்தவருக்குச் சிறை

விபத்துகளை ஏற்படுத்தி, பணம் பறித்தவருக்குச் சிறை

1 mins read
8eb9e13b-f429-4d26-b052-f4f72829f3b2
மிரட்டி பணம் பறித்த அஷ்ரஃப் அப்துல் சுகூர். - படம்: பெர்னாமா

ஜார்ஜ் டவுன்: வேண்டுமென்றே சாலை விபத்துகளை ஏற்படுத்தி, பின்னர் வாகனமோட்டிகளை மிரட்டி பணம் பறித்த மலேசிய ஆடவருக்கு 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஷ்ரஃப் அப்துல் சுகூர், 41, என்ற இந்த ஆடவர் தன்மீதான இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

முதல் குற்றச்சாட்டின்படி, அஷ்ரஃப் ஒரு பெண்ணை ‘பணம் தராவிட்டால் நடப்பது வேறு’ என்று அச்சுறுத்தி, 50 ரிங்கிட் பறித்தார்.

இரண்டாவது குற்றச்சாட்டும் அத்தககையதுதான். இம்முறை அவர் 30 ரிங்கிட் பறித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 15 - 30 தேதிகளுக்குள் ஜெலுத்தோங்கின் ஜாலாங் தெம்பாகாவில் அஷ்ரஃப் இக்குற்றங்களைப் புரிந்தார்.

முதல் குற்றத்திற்கு 11 மாதங்களும் இரண்டாவது குற்றத்திற்கு 10 மாதங்களும் இவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சென்ற ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இரண்டு தண்டனைகளையும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தான் வேலையின்றி இருந்ததாலும் வயதான பெற்றோரைப் பேண வேண்டி இருந்ததாலும் தனக்குக் குறைந்தபட்ச தண்டனை விதிக்கும்படி நீதிபதியிடம் அஷ்ரஃப் கேட்டுக்கொண்டார்.

அஷ்ரஃப் வேண்டுமென்றே விபத்து விளைவித்து, இழப்பீடாகப் பணம் தரும்படி கேட்ட வகையில், அவரது படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவின.

குறிப்புச் சொற்கள்