அட்லான்டிக் பெருங்கடலில் வீழ்ந்த தனியார் விமானத்தின் 11 பயணிகள் மீட்பு

அட்லான்டிக் பெருங்கடலில் வீழ்ந்த தனியார் விமானத்தின் 11 பயணிகள் மீட்பு

2 mins read
பயணிகள் ஐந்து மணிநேரம் மிதவைகளில் உதவிக்குக் காத்திருந்தனர்
9a4a40b4-492d-449e-9334-72cf70e9fe76
தனியார் விமானம் ஒன்றின் மாதிரி புகைப்படம். - படம்: கே9 ஜெட்ஸ்
multi-img1 of 2

ஃபுளோரிடா: அமெரிக்க நகரான ஃபுளோரிடாவின் மத்தியப் பகுதிக்கு அருகே உள்ள அட்லான்டிக் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை (மே 12) வீழ்ந்த தனியார் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர்.

அதன் விவரங்களை அமெரிக்க ஆகாயப்படையும், கடற்காவல் படையும் புதன்கிழமை (மே 13) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இணைந்து வெளியிட்டன.

விமானம் கடலில் விழுந்ததும், விமானி உட்பட அனைத்து பயணிகளும் ஆபத்தில் பயன்படும் சிறிய மிதவையில் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் தத்தளித்தபடி உதவிக்குக் காத்திருந்தனர்.

“பயணிகள் அனைவரும் உயிர்பிழைத்தது அதிசயமான ஒன்று“ என்று விமானப் படையின் உயர் அதிகாரி மேஜர் எலிசபத் பையோவடி கூறினார். மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானங்களில் ஒன்றை அவர் தலைமையேற்றிருந்தார்.

பஹாமஸ் தீவில் இருந்து 11 நபர்களுடன் புறப்பட்ட அந்த விமானத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்தது என நம்பப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஃபுளோரிடா மாநிலத்தின் கரையிலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் விமானம் விழ நேர்ந்தது.

அமேசமயம் விமானத்தில் இருந்த அவசர உதவிக்கான சமிக்ஞை செயல்படுத்தப்பட்டு, அத்தகவல் அமெரிக்கக் கடற்காவல் படைக்குக் (கோஸ்ட் கார்ட்) கிடைத்தது.

பயிற்சியில் இருந்த போர் விமானம்

அந்த வட்டாரத்தில் போர்க்காலப் பயிற்சிகள் மேற்கொண்டிருந்த மேஜர் எலிசபத்தின் விமானம் அவசர உதவிக்கு கடற்காவல் படையால் அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கு சென்றடைந்த அவரது தலைமையிலான விமானம் உணவுப் பொருள்களுடன் கூடுதல் மிதவைகளை நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த பயணிகளுக்குக் கீழே இறக்கிவிட்டது.

பயணிகள் அனைவரும் பிறகு, விமானப் படையின் ஹெலிகாப்டர்களில் மீட்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்