ஃபுளோரிடா: அமெரிக்க மாநிலமான ஃபுளோரிடாவின் மத்தியப் பகுதிக்கு அருகே உள்ள அட்லான்டிக் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை (மே 12) விழுந்த தனியார் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர்.
அதன் விவரங்களை அமெரிக்க ஆகாயப்படையும் கடலோரக் காவல் படையும் புதன்கிழமை (மே 13) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இணைந்து வெளியிட்டன.
விமானம் கடலில் விழுந்ததும், விமானி உட்பட அனைத்துப் பயணிகளும் ஆபத்தில் பயன்படும் சிறிய மிதவையில் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் தத்தளித்தபடி உதவிக்குக் காத்திருந்தனர்.
“பயணிகள் அனைவரும் உயிர்பிழைத்தது அதிசயமான ஒன்று,” என்று விமானப் படையின் உயர் அதிகாரி மேஜர் எலிசபெத் பையோவடி கூறினார். மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானங்களில் ஒன்றுக்கு அவர் தலைமையேற்றிருந்தார்.
பஹாமஸ் தீவிலிருந்து 11 நபர்களுடன் புறப்பட்ட அந்த விமானத்தின் ஓர் இயந்திரம் செயலிழந்தது என நம்பப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஃபுளோரிடா மாநிலத்தின் கரையிலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் விமானம் விழுந்தது.
அதேசமயம், விமானத்தில் இருந்த அவசர உதவிக்கான சமிக்ஞை செயல்படுத்தப்பட்டு, அத்தகவல் அமெரிக்கக் கடலோரக் காவல்படைக்கு கிடைத்தது.
பயிற்சியில் இருந்த போர் விமானம்
அந்த வட்டாரத்தில் போர்க்காலப் பயிற்சிகள் மேற்கொண்டிருந்த மேஜர் எலிசபெத்தின் விமானம் அவசர உதவிக்குகடலோரக் காவல்படைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்கு சென்றடைந்த அவரது தலைமையிலான விமானம், உணவுப் பொருள்களுடன் கூடுதல் மிதவைகளை நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த பயணிகளுக்குக் கீழே இறக்கிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பயணிகள் அனைவரும் பிறகு, விமானப் படையின் ஹெலிகாப்டர்களில் மீட்கப்பட்டனர்.

