ஹாங்காங்: ஹாங்காங்கில் காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் திடீரென மயங்கியதால், காருக்குள் இருந்த அவரது மகனான 11 வயது சிறுவன், அந்தக் காரை ஓட்ட முயன்றார்.
மற்றொரு கார் மற்றும் சாலையோரத் தடுப்புகளுடன் மோதிய பிறகு, அந்தக் கார் நின்றது. ஜனவரி 26ஆம் தேதி மாலை சுமார் 6.20 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.
அன்று, 47 வயதுடைய ஆடவர் ஒருவர் ஷிங் சாய் சாலையில் மேற்கு நோக்கி காரை ஓட்டிச் சென்று கென்னடி டவுனில் உள்ள சேண்ட்ஸ் ஸ்திரீட்டில் திரும்பிக் கொண்டிருந்ததாக, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நபர் மயக்கமடைந்த பிறகு, முன் பயணி இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன், காரின் கட்டுப்பாட்டைப் பெறும் முயற்சியில் ஸ்டீயரிங் வளையத்தைப் பிடித்தார்.
பயணிகள் இருக்கையில் இருந்தபோது சிறுவன் வாகனத்தை இயக்க முயன்றதால், கார் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் நகர்ந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சேண்ட்ஸ் ஸ்திரீட் வழியாக தொடர்ந்து சென்ற பிறகு, கேட்சிக் ஸ்திரீட் சந்திப்புக்கு அருகில் மற்றொரு கார் மீதும் சாலையோரத்தில் இருந்த இரும்புத் தடுப்பு மீதும் வாகனம் மோதி நின்றது.
சிறுவனும் மற்ற வாகனத்தின் 66 வயது ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

