கோலாலம்பூர்: மலேசியாவில் 627 கோயில்களுக்கு 12.54 மில்லியன் ரிங்கிட் நிதியை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடையில் தர்ம மதானி திட்டத்தின்கீழ் அந்த நிதி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சர் ஆர் ரமணன் கூறினார்.
திட்டத்தின் முதல் கட்டமாக, 162 இந்துக் கோயில்களுக்கு 3.24 மில்லியன் நிதியுதவி ஜனவரி 27ஆம் தேதி வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தில் மேலும் 297 கோயில்கள் 5.94 மில்லியன் ரிங்கிட்டை ஏப்ரல் 28ஆம் தேதி பெற்றுக்கொண்டன.
“இன்று, மூன்றாம் கட்டத்தின்மூலம் நாம் மேலும் ஒரு படி முன்னேறுகிறோம். அதன்கீழ், 168 இந்துக் கோயில்களுக்கு மொத்தம் 3.36 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என்று திரு ரமணன் தெரிவித்துள்ளார்.
இந்த உதவித் திட்டத்தின்மூலம், கோயில்கள் தொடர்ந்து சமூக நிலையங்களாகச் சேவையாற்ற முடியும் என்று அவர் சொன்னார். அவற்றால் சமய வகுப்புகள், ஆளுமைத்திறன் மேம்பாட்டு முகாம்கள், பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் முதலியவற்றை ஏற்பாடு செய்ய முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
‘மித்ரா’ எனும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவின்மூலம் மதானி அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்கான கல்வி ஆதரவை வலுப்படுத்துதாக அவர் கூறினார். தொடக்கக் கல்வி நிதியுதவித் திட்டத்தின் வாயிலாக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு அத்திட்டத்தில் பங்கேற்க 162 பாலர் பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மொத்தமாக 8.87 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

