மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஊழியர்களின் ஊதியம் இதுவரை இல்லாத அளவாக 12 விழுக்காடு உயர்த்தப்படும் என்று அந்நாட்டுத் தொழிலாளர் துறைச் செயலாளர் ஃபிரான்சிஸ் தொலந்தினோ செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மெட்ரோ மணிலா பகுதியில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் 1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், நாளொன்றுக்கு 85 பெசோ (சிங்கப்பூர் $1.79) கூடுதல் ஊதிய உயர்வு பெறுவர்.
“தலைநகர்ப் பகுதியில் இதுவரை ஒரேமுறை அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்விலேயே இதுவே மிகப் பெரிய ஊதிய உயர்வு,” என்று தொழிலாளர் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 19ஆம் தேதியன்று 60 பெசோவும், 2027 ஜனவரியில் 25 பெசோவும் ஊதியம் உயர்த்தப்படும்.
இந்த உயர்வு முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, வேளாண்மை அல்லாத பிற துறைகளுக்கான அன்றாடக் குறைந்தபட்ச ஊதியம் 12 விழுக்காடு கூடி, 780 பெசோவாக உயரும்.
அதேபோல் வேளாண்துறை, 15 அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சேவை மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், பத்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட உற்பத்தித் துறை ஆகிய துறைகளில் குறைந்தபட்ச அன்றாட ஊதியம் 13 விழுக்காடு உயர்ந்து 743 பெசோவாக அதிகரிக்கும்.
இருப்பினும், பிலிப்பீன்ஸ் தொழிற்சங்க காங்கிரஸ் இந்த ஊதிய உயர்வைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஊழியர்களின் வாங்கும் திறன் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், “இந்த உயர்வு முற்றிலும் போதுமானதன்று,” என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதனை அரசாங்கம் இரு தவணைகளாக வழங்குவதற்கும் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசிய நாடான பிலிப்பீன்சில் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.2 விழுக்காட்டைத் தொட்டது. பின்னர் அதற்கடுத்த மே மாதத்தில் அது 6.8 விழுக்காடாகச் சற்றே குறைந்த நிலையில், தற்போது இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

