ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூரில் ஆலம் புடிமான் வட்டாரத்திற்கு அருகே உள்ள பெர்சியாரான் மொக்தார் தஹாரி சந்திப்பில் வெள்ளிக்கிழமை (அக். 9) பிற்பகல் 11 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் தொடர்பில் லாரி ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியாகியுள்ளது.
அந்த 51 வயது நபருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில், அவர் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்ததாக ஷா ஆலம் வட்டாரக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் சருதீன் சமாஹ் தெரிவித்தார். ஆம்ஃபெட்டமைன், மெத்தம்ஃபெட்டமைன் வகை போதைப்பொருளைச் சந்தேக நபர் உட்கொண்டதாகக் கூறப்பட்டது.
“1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 44(1A)(a)ன்கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று சனிக்கிழமை (அக். 10) வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
அந்த லாரி ஓட்டுநர் சனிக்கிழமை ஷா ஆலம் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
மாலை மணி 4.20க்குப் பூஞ்சாக் பெர்டானாவிலிருந்து பூஞ்சாக் ஆலம் நோக்கிச் சரிவான பாதையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது. லாரியில் வேகக் கட்டுப்பாட்டு விசையில் கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் ஓட்டுநர் முதற்கட்ட விசாரணையில் சொன்னதாகத் திரு சருதீன் கூறினார்.
தொடர்ந்து அந்த லாரி எதிர் பாதையில் புகுந்து, ஆலம் புடிமான் முச்சந்திப்பில் போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளுக்காக நின்றுகொண்டிருந்த 11 வாகனங்கள் மீது மோதியதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில், ‘எஸ்யுவி’ ரக காரை ஓட்டிச் சென்ற 58 வயது நபர் தலையில் பலத்த காயமடைந்து பூஞ்சாக் ஆலம் யுஐடிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதே காரில் பயணம் செய்த அவரது 53 வயது மனைவியும் 17 வயது பேரனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் நிலைமை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஹேட்ச்பேக்’ ரக காரை ஓட்டிச் சென்ற 29 வயது நபருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன; அவரும் சீரான நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
