கோத்தா பாரு: கோத்தா பாரு: மலேசியாவின் கிளந்தான் மாநிலம், பெங்கலன் சேப்பாவில் சுல்தான் இஸ்மாயில் பெத்ரே விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தக் கட்டுமானப் பகுதியில் திங்கட்கிழமை (ஜனவரி 29) காலையில் ஊழியர்கள் வடிகால் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 9.40 மணியளவில் 125 கிலோ எடைகொண்ட வெடிகுண்டை அவர்கள் கண்டுபிடித்ததாக கோத்தா பாரு காவல்துறைத் தலைவர் ரோஸ்டி தௌட் தெரிவித்தார்.
அது தொடர்பில் காலை 9.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டுச் செயலிழப்புப் பிரிவினர் அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டனர். கட்டுமானத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிகுண்டுதான் என்பதை அவர்கள் உறுதிசெய்தனர். அதன் நீளம் 98 சென்டிமீட்டர் என்றும் எடை 125 கிலோ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அந்த வெடிகுண்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.20 மணியளவில் வெடிப்பின்மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டது.
அப்போது, விரும்பத்தகாத நிகழ்வு எதுவும் இடம்பெறவில்லை என்று திரு தௌட் சொன்னார்.
கிளந்தான் விமான நிலையக் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு செப்டம்பரில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

