மேற்கு ஜாவா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் சுண்ணாம்புக் கற்சுரங்கத்தில் ஏற்பட்ட கற்சரிவில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 12 பேர் காயமடைந்ததாகப் பேரிடர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜாவாவிலுள்ள சிரெபோன் நகரில் அந்தச் சம்பவம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடந்தது.
கற்சுரங்கத்தை மேற்பார்வையிடும் நிறுவனம் சட்ட அனுமதியுடன் இயங்கி வந்தாலும் பாதுகாப்புத் தரநிலையில் குறைபாடுகள் இருந்ததாக மேற்கு ஜாவாவின் ஆளுநர் டேடி முல்யாடி தெரிவித்தார். விபத்தை அடுத்து சுரங்கத்தை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நொறுங்கி விழுந்த கற்களுக்குள் ஊழியர்களும் கனமான கருவிகளும் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தற்போது 13 பேர் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து, ஆறு பேர் இன்னும் புதையுண்டிருக்கலாம்,” என்று உள்ளூர்ப் பேரிடர் நிர்வாக அமைப்பின் தலைவர் டெனி நுர்ச்சஹ்யா கூறினார்.
மற்றொரு கற்சிதைவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுகையில் மீட்புப் பணியாளர்கள் தங்கள் பணிகளை ஒத்திவைத்துச் செயல்பாட்டை சனிக்கிழமை காலை தொடங்கினர்.
இந்தக் கற்சுரங்கத்தில் கற்சிதைவு இரண்டாவது முறையாக நடந்துள்ளது. பிப்ரவரியில் நொறுங்கி விழுந்தபோதும் அப்போது எவருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ மரணம் நேர்ந்ததாகவோ தெரியவில்லை.